மெடிக்கல் இன்சூரன்ஸ் கிளைம் செய்த கோவை பெண்.. காப்பீடு நிறுவனம் அடாவடி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கோவை: ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு வசதியுடன் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்த கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே ஆண்டில் இரண்டு முறை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் முதல் முறை அனுமதிக்கப்பட்ட போது ஓரளவு பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியது. ஆனால் இரண்டாவது முறைஅனுமதிக்கப்பட்ட போது மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் கோவை நுகர்வோர் நீதிமன்றம் முக்கியமான உத்தரவினை பிறப்பித்துள்ளது.
மருத்துவ காப்பீடு வேண்டும் என்பதில் இன்றைக்கு பலருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ காப்பீடு செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயதானவர்கள், நடுத்தர வயது உள்ளவர்கள் மருத்துக காப்பீடு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.. மருத்துவ காப்பீடு என்பது இன்றைக்கு எல்லோருமே செய்து கொள்வது நல்லது. பணம் கட்டி பெரிய அளவில் மருத்துவ காப்பீடு செய்ய முடியாதவர்கள், தமிழக அரசின் காப்பீடு திட்டத்தில் இணையலாம். அதேபோல் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா காப்பீடு திட்டத்தில் சேரலாம். ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவ காப்பீடு பெற முடியும்.

சரி விஷயத்திற்கு வருவோம்.. மருத்துவ காப்பீட்டை பொறுத்தவரை என்ன தான் அரசு அல்லது தனியார் காப்பீடு என்றாலும் சில நடைமுறைசிக்கல்களை மக்கள் எதிர்கொள்கிறார்கள். ஒரிஜினல் பில் இல்லை என்று வேண்டுமென்றே காப்பீட்டை தர மறுப்பது, நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத கட்டுப்பாடுகளை கூறி குழப்புவது போன்ற செயல்களை சில காப்பீடு நிறுவனங்கள் செய்கின்றன.
கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே ஆண்டில் இரண்டு முறை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் இரண்டாவது முறை காப்பீடு தொகை பெறுவதற்கு நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார். அவருக்கு சாதமான தீர்ப்பு நீதிமன்றத்தில் வந்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கோவை ஒப்பணக்காரவீதியை சேர்ந்தவர் டி.ஜே.பாண்டியன் ( 66 வயது). இவருடைய மனைவி சத்யபாமா (62). இந்த தம்பதி சார்பில் கோவை நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- நாங்கள் கோவை திருச்சி ரோட்டில் அமைந்துள்ள ஒரு காப்பீடு நிறுவனம் செயல்படுத்தி வரும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருக்கிறோம்.. ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சத்துக்கான காப்பீடுக்கு, ரூ.49 ஆயிரத்து 888 பிரீமியம் தொகை செலுத்தி வந்தோம். இந்த நிலையில் சத்யபாமாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கடந்த 12.3.2022 அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதில் மொத்த மருத்துவ செலவில் மருத்துவ காப்பீட்டு நிறுவனம் ஓரளவு தொகையை வழங்கியிருந்தது. ஆனால் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 3.6.2022 அன்று மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 397 மருத்துவ செலவு ஏற்பட்டது. ஆனால் அந்த தொகையை வழங்குமாறு சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்தை அணுகியபோது எந்த காரணமும் இன்றி மருத்துவ செலவு தொகையை அந்த நிறுவனம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டோம். உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு பாண்டியன் சத்யபாமா தம்பதி தங்களது மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
இவர்களின் மனுவை விசாரணை நடத்திய கோவை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர், சத்யபாமாவுக்கு குறிப்பிட்ட காப்பீடு நிறுவனம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 397 தொகையை வழங்குவதுடன், மனஉளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோர்ட்டு செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications