கோவையில் அரசு ஊழியரை.. காலில் விழ வைத்த நபர் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. போலீசார் அதிரடி
கோவை: கோவை அன்னூர் ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் தாழ்த்தபடுத்தபட்ட சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியரைக் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த ஒட்டர்பாளையம் கிராமத்தில், விஏஓ-ஆக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு உதவியாளராக அதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.

விஏஓ அலுவலகம்
இந்நிலையில் நேற்று அதே ஊராட்சிக்குட்பட்ட கோப்ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கோபல்சாமி என்பவர் தன்னுடைய சொத்து விவரங்களைச் சரிபார்ப்பதற்காகக் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, ஆன்லைனில் விண்ணப்பித்து வர வேண்டும் எனக் கூறிய நிலையில் கிராம நிர்வாக அலுவலருடன் தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.

மிரட்டல்
வி.ஏ.ஓ அலுவலகத்தில் கோபல்சாமி சத்தம் போட்டு கலைச்செல்வியை அச்சுறுத்தும் விதமாகப் பேசவே, உதவியாளர் முத்துசாமி ஒரு பெண் அரசு அலுவலரிடம் இப்படிப் பேசக்கூடாது எனவும் முறையான ஆவணங்களைக் கொண்டு வரும்படியும் கூறியுள்ளார். இதனால் முத்துச்சாமி மீது கோபமடைந்த கோபல்சாமி, அவரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்காவிட்டால், பொய்க் குற்றச்சாட்டுக் கூறி வேலையை விட்டு நீக்கி விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

காலில் விழுந்து மன்னிப்பு
இதனால் கோபால்சாமியின் காலில் விழுந்து முத்துசாமி கதறி அழுது மன்னிப்பு கேட்டுள்ளார். இதனை வி.ஏ.ஒ அலுவலகத்திற்கு வந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். தாழ்த்தபடுத்தபட்ட சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை அரசு அலுவலகத்திலேயே காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் இரு தரப்பினரிடமும் தனித்தனியாக நேற்று விசாரணை நடத்தினார்.

குற்றவியல் நடவடிக்கை
இதனையடுத்து விசாரணை அறிக்கை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், வி.ஏ.ஓ அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோரிடம் பிரச்சினை செய்து அவர்களைப் பணி செய்யவிடாமல் இடையூறு செய்து, உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோவை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். அதன்படி அவர் மீது போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications