போலீஸ்காரரே இப்படி செய்யலாமா? பொள்ளாச்சியில் தொடர்ந்து செயின் பறித்த ஏட்டு.. ஷாக் பின்ணி
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். புல்லட் பைக்கில் ஹெல்மெட் அணிந்து இவர் கைவரிசை காட்டி வந்த நிலையில் தற்போது வசமாக சிக்கி உள்ளார். இவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
போலீஸ்.. காக்கிச்சட்டையில் கம்பீரமாக வலம் வந்து பொதுமக்களை காத்து வரும் காவல் தெய்வம். வெயிலோ, மழையோ, இரவோ, பகலோ நேரம் காலம் பாராமல் நமக்காக 24 மணிநேரமும் தொடர்ந்து பணியாற்றி வரும் உன்னத மனிதர்கள் தான் போலீஸ்காரர்கள்.

இப்படிப்பட்ட கெத்தான, மாஸான போலீஸ் பணியில் இருந்து கொண்டு காவலர் ஒருவர் செய்த சம்பவம் தான் இப்போது கோவை மாவட்டத்தை உலுக்கி உள்ளது. அதாவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக அந்த போலீஸ்காரர் செய்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்ன நடந்தது? அந்த போலீஸ்காரர் என்ன செய்தார்? என்பதை பார்க்கலாம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவருக்கு வயது 58. இவர் கடந்த மாதம் 27 ம் தேதி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஜோதி நகர் அருகே சென்றபோது அவரை புல்லட் பைக் ஒன்று பின்தொடர்ந்தது. புல்லட் பைக்கை முகம் தெரியாத வகையில் ஹெல்மெட் அணிந்து ஒருவர் ஓட்டினார்.
இந்த வேளையில் திடீரென்று அந்த நபர் மகேஸ்வரி அருகே சென்று அவரது கழுத்தில் கிடந்த 4 சவரன் தங்கசெயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்றார். அதேபோல் பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியை சேர்ந்தவர் அம்சவேணி. இவருக்கு வயது 32. இவர் தனது மகளுடன் கடந்த மாதம் 28 ம்தேதி டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
உடுமலை சாலை பிஏபி அலுவலகம் அருகே சென்றபோது புல்லட்டில் ஹேல்மெட் அணிந்து வந்த நபர் அவரது கழுத்தில் கிடந்த 2 சவரன் தங்க செயினை பறித்து சென்றார். அடுத்தடுத்து நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் என்பது பொள்ளாச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பெண்கள் தனியாக செல்ல அச்சப்பட்டனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது செயின் பறித்த நபரின் உருவம் கேமராக்களில் பதிவாகி இருந்தது. இந்த கேமரா காட்சிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட விசாரணையில் 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது ஒரே நபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் யார்? பின்னணி பற்றி விசாரிக்கப்பட்டது.
இந்த விசாரணையில் தான் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது 2 பெண்களிடமும் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் போலீஸ்காரர் என்பது தெரியவந்தது. அதாவது மாக்கினாம்பட்டி பகுதியில் வசித்து வரும் 41 வயது நிரம்பிய சபரி கிரி என்பவர் தான் செயின் பறிப்பில் ஈடுபட்டதும், அவர் தற்போது செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 7.5 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடன் அதிகரித்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications