“சிறுத்தையே வெளியே வா”.. கோவை திமுகவினர் உற்சாக போஸ்டர்! மீண்டும் கொங்கு கிங் ஆகும் செந்தில் பாலாஜி!
கோவை: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் கரூர், கோவை மாவட்ட திமுகவினர் பயங்கர உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். சிறையில் இருந்து வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜி விரைவில் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக கூறப்படும் நிலையில், கோவை மாவட்ட திமுகவினர், செந்தில் பாலாஜியை வரவேற்று பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். மீண்டும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடந்த வழக்கில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு இன்று ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து, 15 மாதங்களுக்குப் பின்னர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறுகையில், "செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் குற்றவாளியாகவே இருந்ததால், அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து 471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்து இருப்பதால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், செந்தில் பாலாஜியின் விடுதலையைக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மற்றும் பொறுப்பு அமைச்சராக இருந்த கோவையில் திமுக நிர்வாகிகள் கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர், கோவையின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசுகள் வெடித்தும், சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் திமுகவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திமுக கொடிகளை ஏந்தியபடி பல்வேறு இடங்களிலும் அக்கட்சியினர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை கொண்டாடி வருகின்றனர்.
மேலும், செந்தில் பாலாஜி, சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வெளியே வர உள்ள நிலையில், திமுகவினர் புழல் சிறை முன்பாக திரண்டுள்ளனர். பேண்ட் வாத்தியம் முழங்கி, திமுக கொடிகளுடன் அவர்கள் செந்தில் பாலாஜியை வரவேற்று வருகின்றனர்.
கோவையில் திமுகவினர், செந்தில் பாலாஜியை வரவேற்று போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். "பூட்டிய இரும்பு கூட்டின் கதவு திறந்தது! சிறுத்தையே வெளியே வா!" என்ற வாசகங்களுடன் கோவை நகரின் பல்வேறு இடங்களில் திமுகவினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளை பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டிற்கான பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை வைக்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதைத்தொடர்ந்து சென்னை திரும்புகிறார்.
முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியதுமே, செந்தில் பாலாஜி அவரைச சந்திப்பார் என்றும், அதன் பிறகு அமைச்சரவையில் அவரை இணைப்பதற்கான வேலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் ஆனதுமே, முன்பு போல கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரை போலவே கோவை மாவட்ட திமுகவினரும் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதற்குக் காரணம், செந்தில் பாலாஜி மீண்டும் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக வருவார் என்பதால் தான் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications