கோவையில் "ஸ்லீவ்லெஸ் டிரஸ்" போடக்கூடாதா? பூ மார்க்கெட் வியாபாரிகள், மாணவி மாறி மாறி போலீசில் புகார்
கோவை: கோவை பூ மார்க்கெட்டிற்கு ஸ்லீவ் லெஸ் டிரஸ் போட்டு வந்த சட்டக்கல்லூரி மாணவியை உள்ளே விட மறுத்து வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவி கோவை கமிஷனர் ஆபீசில் புகார் தரவும், கோவை மாநகர் மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் நல சங்கத்தினரும், கமிஷனர் அலுவலகத்தில் மனு தந்துள்ளனர்.. பூ மார்க்கெட்டில் ரீல்ஸ் எடுப்பதற்காக வந்த பெண் முழு வீடியோவும் வெளியிடாமல் தங்கள் மீது களங்கம் தெரிவித்து, பொய்யான புகாரை தந்துள்ளதாகவும் வியாபாரிகள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.
கோவை வீரபாண்டி அருகே உள்ள நாயக்கனூர் அண்ணாநகரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜனனி.. இவருக்கு 20 வயதாகிறது.. கடந்த 21ம் தேதி கோவை பூ மார்க்கெட்டுக்கு ஸ்லீவ்லெஸ் உடையுடன் சென்றிருக்கிறார்..

ஜனனியின் டிரஸ்
அப்போது அங்கிருந்த சிலர் ஜனனியின் டிரஸ் குறித்து விமர்சனம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். உடனே ஜனனி தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி காண்போரை திகைக்க வைத்தது.
அந்த வீடியோவில், ''பூ மார்க்கெட்டிற்கு இப்படியெல்லாம் ஸ்லீவ் லெஸ் டிரஸ் போட்டுகிட்டு வரக்கூடாது... ஏதாவது ஏடாகூடமா அசம்பாவிதம் நடந்தா என்ன பன்றது'' என்று ஜனனியிடம் பூ மார்க்கெட் வியாபாரிகள் கேள்வி எழுப்புகிறார்கள்..
பப்ளிக் மார்க்கெட் - ஸ்லீவ்லெஸ் டிரஸ்
அதற்கு ஜனனி, ''இது யாருடைய மார்க்கெட்? இது பப்ளிக் மார்க்கெட்... மார்க்கெட்டிற்கு வந்து போறவங்க கிட்ட இப்படியெல்லாம் பேசாதீங்க. வேணும்னா, யார் யார் எந்தெந்த டிரஸ் போடனும்னு மார்க்கெட்டில் எழுதி ஒட்டிடுங்க.. நான் வேணும்னா அதுக்கு, கோர்ட்டில் ஆர்டர் வாங்கி தர்றேன். அவரவர் டிரஸ் அவரவர் உரிமை... உங்களை யாரும் ஒன்றும் சொல்லப்போறது.. ஒருத்தர் ஒழுக்கமா இருந்தாலே போதும்.
என்னுடைய டிரஸ் நான் போட்டுட்டு வர்றேன். நீ போட்டிருக்கிற பனியன் கூட தான் எனக்கு தெரியுது. அதுக்கு என்ன செய்றது? நீங்க ஷால் போட்டுட்டு வர்றீங்களா? மார்க்கெட் வந்து போகிறவங்ககிட்ட இப்படி பேசுறதை முதலில் நிறுத்துங்க.. நீங்க யாரெல்லாம் ரூல்ஸ் பேசறீங்களோ, அவங்க எல்லாரும் கையெழுத்து போட்டு ஒரு பெட்டிஷன் தர்றீங்களா" என்று சட்டக்கல்லூரி மாணவி ஜனனி கேள்வி எழுப்புகிறார்..
ஜனனி கேட்ட கேள்வி
இதற்கு வியாபாரிகள், "ஏதாவது புகார் கொடுக்கனும்னா என்ன பன்றது? வக்கீல் யாராவதை தான் கூப்பிடணும்" என்கிறார்கள்.
உடனே ஜனனி, "சரி கூப்பிட்டு வாங்க. எனக்கு இப்ப வேலை எல்லாம் ஒன்னும் பெரிசா இல்லை.. நான் வேணும்னா வெயிட் பண்றேன்.. வியாபாரிகள் சங்க நிர்வாகிதானே? உங்க பெயர் என்ன?" என்று கேள்வி கேட்கிறார்..
ஆனால் வியாபாரிகள் இதற்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து கலைந்து செல்கிறார்கள். இவ்வளவும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜனனி புகார் தந்தார்.. உடனே கோவை மாநகர் மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் நல சங்கத்தினரும், கமிஷனர் அலுவலகத்தில் மனு தந்தனர்..
பூ மார்க்கெட் - தவறான வீடியோ
அந்த மனுவில், "அந்த பெண்ணிடம் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றுதான் சொன்னோம்.. முழு வீடியோவில் பாதியை மட்டுமே வெளியிட்டு எங்கள் மீது களங்கம் ஏற்படுத்தியிருக்கிறார். விழாக்காலம் என்பதால் ரிலீஸ் எடுப்பவர்களால் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.. தவறாக நாங்கள் பேசியதாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து, சங்கத்தின் செயலாளர் அன்சாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கடந்த 70 வருடமாக பூ மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறோம்.. தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து போகிறார்கள்.. இத்தனை வருடங்களாக இதுபோன்ற ஒரு புகார் வந்ததில்லை.. போலீஸ் ஸ்டேஷனிலும் சரி, கமிஷனர் அலுவலகத்திலும் சரி விசாரித்துக் கொள்ளலாம்.
மலர் அங்காடியில் ரீல்ஸ்
பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அந்த பெண் ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தார்.. இப்போது ஏதோ ஒரு நோக்கத்திற்காக, தவறான செய்தியை சோஷியல்மீடியாவில் வெளியிட்டிருக்கிறா.
மலர் அங்காடியின் பெயருக்கும் களங்கத்தை வீடியோ மூலமாக ஏற்படுத்தி விட்டார்.. இந்த தொழிலை நம்பி 2000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலை பார்த்து வருகிறோம்.. தற்போது இந்த செய்தி எங்களை கடும் மன உளைச்சலை தந்து வருகிறது.. அந்த பெண்ணை, ரீல்ஸ் வீடியோ எடுக்க வேண்டாம் என்று தான் சொன்னோம்.. ஆனால் தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள்.. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications