கோவை கல்லூரி மாணவிக்கு கூட்டு பலாத்காரம்! ஆண் நண்பருக்கு அரிவாள் வெட்டு! உடலில் 28 தையல்!
கோவை: கோவை விமான நிலையம் அருகே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் ஆண் நண்பரை அந்த போதை ஆசாமிகள் அரிவாளால் வெட்டியதால் அவருக்கு 28 இடங்களில் தையல் போடப்பட்டுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி, கோவையில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறாராம். இவர் நேற்று இரவு கோவை விமான நிலையம் பின்புறம் இருக்கும் பிருந்தாவன் நகரில் ஆண் நண்பர் ஒருவருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அவ்வழியாக போதையில் 3 பேர் வந்தனராம். அவர்கள் கார் இருப்பதை பார்த்து அருகே சென்ற போது அதில் ஒரு பெண் இருக்கிறார் என்பதை அறிந்து கதவின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.
இதை தட்டி கேட்ட அந்த ஆண் நண்பரை அந்த 3 பேரும் சேர்ந்து அரிவாளால் தாக்கியதில் அவர் மயங்கிவிட்டார். இந்த நிலையில் அந்த மாணவியை மூவரும் தூக்கிச் சென்று அருகே இருந்த காட்டு பகுதியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனராம்.
இதனிடையே அந்த ஆண் நண்பருக்கு மயக்கம் தெளிந்ததும் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை காணாததால் அவர் பீளமேடு போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீஸார் அந்த பெண்ணை தேடிய நிலையில் அவர் ஒரு காட்டு பகுதியில் இருந்துள்ளார்.
அவரை மீட்ட போலீஸார், மாணவியை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அது போல் அந்த ஆண் நண்பரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவருக்கு 28 தையல்கள் போடப்பட்டுள்ளனவாம்.
அந்த அளவுக்கு அந்த 3 காமுகன்களும் சேர்ந்து அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்த மூவரையும் பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்துள்ளனர். கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் பீளமேடு போலீஸார் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். ஆள் அரவம் இல்லாத அந்த பகுதியில் அந்த கயவர்கள் வீசி சென்ற மதுபாட்டிலில் கைரேகைகளை சேகரிக்கிறார்கள். மேலும் அந்த பகுதிக்கு வரும் வழியில் சிசிடிவி கேமராக்களையும் அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சிக்கிறார்கள். கோவை சம்பவத்தை கண்டித்தும் விரைந்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் பாஜக மகளிரணியினர் இன்று வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த போகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், கோவையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் காவல் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications