கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பிக் பாஸ்.. இனி தாறுமாறா போனால் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்தான்!
கோவை: கோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இரவு நேரத்தில் அதிவேகத்தில் வாகனங்கள் செல்வதாகவும் இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் புகார்கள் வந்த நிலையில் இதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இனி விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படும்.
விபத்துக்களை தடுக்கும் விதமாகவும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் விதமாக ஏஐ வசதியுடன் கூடிய 44 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் ஒரு வாகனம் பாலத்தில் ஏறுவது முதல் இறங்குவது வரை முழுமையாக கண்காணிக்கும். அப்போது அந்த வாகனம் எந்தமாதிரியான விதிமீறலில் ஈடுபடுகிறது என்பதை கண்காணித்து அதற்கு ஏற்ற மாதிரி அபராதம் அவர்களது செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

3-வது பெரிய மேம்பாலம்
தமிழகத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் கோவை அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோ மீட்டர் நீளத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது.
தமிழகத்தின் மிக நீளமான சாலை மேம்பாலமாக மதுரை - நத்தம் மேம்பாலம் சுமார் 7.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள நிலையில் இது அதைவிட பெரிய மேம்பாலமாக 10.1 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டிலேயே 3-வது மிக நீளமான மேம்பாலமாக இது அமைந்தது. இந்த பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள்
4 வழித்தட உயர்மட்ட மேம்பாலமாகவும், 6 வழித்தடத்துடன் கூடிய விரிவுப்படுத்தப்பட்ட தரைவழிச்சாலையாகவும் என 10 வழித் தடங்களுடன் அமைக்கப்பட்டு உள்ள இந்த மேம்பாலம் கோவையின் புதிய அடையாளமாக மாறி உள்ளது. மேலும் இந்த பாலத்தின் மூலம் நகரில் இருந்து விமான நிலையம் மட்டுமின்றி சேலம், ஈரோடு, திருப்பூர், அவினாசி ஆகிய பகுதிகளுக்கும் விரைவாக செல்ல முடிகிறது. ஆனால் இரவு நேரங்களிலில் இந்த பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் விதிகளை பின்பற்றுவதில்லை என கூறப்படுகிறது.
மேலும் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும் புகார்கள் வந்தன. சில வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக ஸ்பீடில் செல்வதாகவும் இதனால் விபத்துக்கள் அதிகமாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விபத்துகளை தடுப்பதற்காகவும், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாகவும் தற்போது பாலத்தில் ஏஐ வசதியுடன் கூடிய 44 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படும்
புதிதாக திறக்கப்பட்டுள்ள ஜிடி நாயுடு மேம்பாலத்தில், 60 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதி உண்டு. இதேபோன்று பாலத்தில் ஏறும்போதும், இறங்கும் போதும் 30-40 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும். ஆனால் இந்த பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பலர் இந்த வேக கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில்லை. அதிலும் இரவு மற்றும் நள்ளிரவில் செல்லும் வாகன ஓட்டிகள் வேக கட்டுப்பாட்டை மதிப்பதில்லை என கூறப்படுகிறது.
அதிவேகத்தில் வாகனங்கள் செல்வதால் அவ்வப்போது விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே தான் விபத்துக்களை தடுக்க வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தான் விதிமுறை மீறுபவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் விதமாக ஏஐ வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பிரத்யேக கட்டுப்பாட்டு மையம்
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சமுத்திரகனி கூறுகையில், "கோவை ஜிடி நோயுடு மேம்பாலத்தில் 44 கேமராக்கள், 16 வீடியோ ஸ்கிரீன் பொருத்தப்பட்டு உள்ளன. அதிவேகம், ஹெல்மெட் போடாமல் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது போன்ற அனைத்து விதிமீறல்களும் உடனுக்குடன் பதிவு செய்து, அபராத படிவம் அவரவர் செல்போன் எண்களுக்கே சென்றுவிடும். எந்த ஒரு விதிமுறைகளை மீறினாலும் உடனுக்குடன் அவர்கள் செல்போன் எண்ணுக்கு அபராதம் சென்றுவிடும்.
ஒரு வாகனம் பாலத்தில் ஏறியது முதல் இறங்கும் வரை முழுமையாக கண்காணிக்கப்படும். விதிமுறைகளை மீறும் வாகனங்களின் எண் மற்றும் என்ன விதிமீறல் என்பது ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். இந்த கேமராக்களுக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. தகவல் உள்ளீடு செய்யும் பணி நடக்கிறது. விரைவில் இந்த முறை பயன்பாடுக்கு வரப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications