கோவை சிறுமி வழக்கில் கைதான வாலிபர் எஸ்கேப் ஆக முயற்சி! காலில் மாவுக்கட்டுடன் மருத்துவமனையில் அட்மிட்
கோவை: கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கார்த்தி, மோகன்ராஜ் என இருவர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசில் இருந்து தப்பி ஓட முயன்ற கார்த்திக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் காவல் எல்லைக்குட்பட்டப் பகுதியில் வசித்த 10 வயது சிறுமி வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால், பதற்றமடைந்த பெற்றோர் அன்றிரவே சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

குளக்கரையில் சிறுமி உடல்
புகாரின் பேரில் சூலூர் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கினர். வீட்டின் அருகிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையில் சிறுமியின் சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்ட காவலர்கள், அது காணாமல் போன சிறுமிதான் என்பதை உறுதி செய்தனர். உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழவே, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதே பகுதியைச் சேர்ந்த இருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்களிடம், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்
இதற்கிடையில், சிறுமி கொலையில் நீதி கேட்டும், பிடிபட்டவர்களைக் காட்டக்கோரியும் சிறுமியின் உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலை 5 மணி வரை போராட்டம் நடத்தினர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பின் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையே சிறுமி கொலை வழக்கில், 33 வயதான கார்த்திக் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக், கடந்த 18 வருடங்களாக கோவையின் பள்ளபாளையம் பகுதியில் வசிப்பவர். சிசிடிவி காட்சிகள் மற்றும் அவரது வாக்குமூலம் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கார்த்திக்கிற்கு உதவிய மோகன்ராஜும் இரண்டாவது நபராகக் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் போலீசிடம் இருந்து தப்பி ஓட முயன்ற கார்த்திக்கிற்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கை, காலில் எலும்பு முறிவு
விசாரணைக்காக போலீசார் கார்த்திக்கை அழைத்து சென்ற போது போலீசிடம் இருந்து தப்ப முயன்றுள்ளார். இதில் கால் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோகன்ராஜை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள் வரும் 27 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.
இதற்கிடையே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டே கொலை செய்யப்பட்டதாகவும், பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திக் தான் சிறுமியை பேச்சு வழக்கில் அழைத்து சென்று இப்படி செய்ததாகவும் மேற்கு மண்டல ஐஜி ரம்யா செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications