"ஆக்சிஜன் குறைஞ்சதை கூட கவனிக்கல" வால்பாறை விபத்தில் மேலும் ஒருவர் பலி! கேரள சுற்றுலா பயணிகள் பகீர்
கோவை: கடந்த வாரம் வால்பாறை மலைப் பாதையில் நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே சிகிச்சை பலனில்லாமல் இன்று மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்தார். இதற்கிடையே போதிய மருத்துவக் கவனிப்பு இல்லாததாலேயே அந்த இளைஞர் உயிரிழந்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இது தொடர்பாக அவர்கள் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு முக்கிய இயற்கை சார்ந்த சுற்றுலாத் தலம் வால்பாறை.. அடர்ந்த தேயிலைத் தோட்டங்கள், பசுமையான காடுகள் மற்றும் மலைகளின் அழகிய காட்சி என்று வால்பாறையில் இயற்கை அழகு கொட்டி கிடக்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், குறிப்பாகக் கோடைக் காலங்களில் வால்பாறைக்குச் செல்வார்கள்.

வால்பாறை விபத்து
இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் அங்கு மிக மோசமான ஒரு விபத்து நடந்தது. அதாவது கடந்த 17ஆம் தேதி வால்பாறை மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தின்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 19 வயது இளைஞர் நவ்சாத் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே இவரது இறப்பிற்குச் சரியான சிகிச்சை அளிக்க ஆள் இல்லாததே காரணம் என அவருடன் சிகிச்சை பெறுபவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பரபரப்பு
"ஆக்சிஜன் அளவு குறைந்த போது கூட அதைக் கவனிக்க மருத்துவர்களோ, செவிலியர்களோ அருகில் இல்லை; இதனால் நவ்சாத் பரிதாபமாக இறந்து விட்டார்" என அவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். மேலும், மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் இல்லை. செவிலியர்கள் செய்ய வேண்டிய பணிகளைத் தூய்மைப் பணியாளர்களே செய்யும் அவல நிலை நிலவுகிறது என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் வெளியிட்டுள்ள ஆடியோ பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அனுமதிக்கவில்லை
பாதிக்கப்பட்டவர்கள் வெளியிட்டுள்ள அந்த ஆடியோவில் மேலும், "நாங்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள், எங்களை எங்கள் ஊர் மருத்துவமனைக்கோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ சிகிச்சைக்காக மாற்ற அனுமதிக்கவில்லை. அதே சமயம் இங்கும் சரியான சிகிச்சை தரவில்லை" என அவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
பகீர்
தங்கள் கண் முன்னே உறவினர்கள் பலியாவதைக் கண்ட அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், தற்போது அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் எஞ்சியிருக்கும் தங்களின் உயிரும் போய்விடுமோ? என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர். ஏற்கனவே நவ்சாத் பலியான நிலையில், எஞ்சியிருக்கும் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பு குறித்துப் பெரும் கேள்விக்குறி எழுந்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வெளியிட்டுள்ள இந்த ஆடியோ பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications