கோவை கருமத்தப்பட்டியில் நீண்ட நேரம் நின்ற கார்.. பதறி ஓடிய சுங்கச்சாவடி ஊழியர்கள்.. பெரும் சோகம்
கோவை: கோவை சவரிபாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்த தொழில் அதிபர், கடன் தொல்லை காரணமாக காரில் செல்லும் வழியில் மனைவியுடன் விஷம் குடித்தார். இதில் காரிலேயே மனைவி உயிரிழந்தார், உயிருக்கு போராடிய கணவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த 55 வயதாகும் மனோகரன், சவுரிபாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி சுமதிக்கு 52 வயது ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முதல் மகள் டாக்டருக்கு படித்து விட்டு திருமணம் முடிந்து கணவருடன் கனடாவில் வசித்து வருகிறார். 2-வது மகள் நக் ஷா கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில் மனோகரனுக்கு ஓட்டல் தொழிலில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரால் ஓட்டல் தொழிலை சரிவர கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் அதிக அளவில் வாங்கினாராம் மனோகரன். இந்த விவகாரத்தில் அவரது மனைவி சுமதியும் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானாரம். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்த அவர்கள் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தார்களாம்.
மனோகரன் நேற்று முன்தினம் காலை தனது ஓட்டலுக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு மாலை வந்த அவர், தனது மனைவி சுமதியுடன் சேலத்திற்கு செல்வதாக கூறி விட்டு காரில் புறப்பட்டு சென்றுள்ளார். அவர்கள் இரவு 10.30 மணி அளவில் கருமத்தம்பட்டி சோதனைச்சாவடி அருகே வந்ததும் காரை நிறுத்தி உள்ளார்கள்.
மன உளைச்சலில் இருந்த அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்த நிலையில், சிறிது நேரத்தில் சுமதி காருக்குள்ளேயே மயங்கி விழுந்து இறந்தார். மனோகரன் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் வெகு நேரமாக கார் நின்றதால் சந்தேகம் அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அருகில் சென்று பார்த்துள்ளனர்.
அங்கு காருக்குள் ஒரு பெண் இறந்த நிலையிலும், மனோகரன் உயிருக்கு போராடுவதும் தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். மனோகரனை மீட்டு நீலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோவை கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கடன் தொல்லை மற்றும் உடல் நல பிரச்சினை காரணமாக அவர்கள் தற்கொலைக்கு முயன்றதும், இதில் சுமதி பரிதாபமாக இறந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. எனினும் வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். கோவை கருமத்தம்ப்ட்டியில் ஓட்டல் உரிமையாளர் மனைவியுடன் காரில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை தடுப்பு எண்கள்: தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்), மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications