இன்ஸ்டாகிராம் 'ரீல்'ஸ் இளைஞருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் கோவை ஐடி பெண் அதிகாரி.. பெரிய ட்விஸ்ட்
கோவை: கோவை சரவணம்பட்டியில் பிரபல ஐடி நிறுவனத்தில் மேனேஜராக 28 வயது இளம் பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பது வழக்கம் . அப்படி பார்க்கும் போது பழக்கமான நபருடன் திருமணம் செய்யாமலேயே அந்த பெண் சேர்ந்து வாழ்ந்துள்ளார். ஆனால் அந்த இளைஞரோ முதல் திருமணத்தை மறைத்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது. தற்போது அவர் தலைமறைவாகிவிட்டார்.
கோவை சரவணம்பட்டியில் இருந்து துடியலுர் செல்லும் சாலையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் 28 வயது இளம்பெண் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் பார்ப்பது வழக்கமாக வைத்துள்ளார். அப்படி பார்த்த போது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மூலம் திருப்பூர் மாவட்டம் தெக்கலூரை சேர்ந்த அருண்பிரகாஷ்(வயது 30) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

முதலில் ஐடி பெண் ஊழியருடன் நட்பாக பழகிய தெக்கலூரை சேர்ந்த அருண்பிரகாஷ் , சில நாட்களில் செல்போன் எண்களை பரிமாறி நட்பை அதிகப்படுத்தினாராம். பின்னர் அருண்பிரகாஷின் வசீகரிக்கும் பேச்சால் மயங்கி அந்த இளம்பெண், காதலிக்க தொடங்கினார். தொடர்ந்து காதல் வலை வீசிய அருண்பிரகாஷ் ஐ.டி. பெண் அதிகாரியிடம் உன்னைதான் திருமணம் செய்து கொள்ளபோகிறேன் என்று நம்பிக்கையாக பேச ஆரம்பித்துள்ளார். இதனால் வருங்கால கணவர் என்ற நம்பிக்கையில் ஐடி பெண் ஊழியர் நெருங்கி பழக ஆரம்பித்தாராம்.
ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே வீட்டில் தங்கி சேர்ந்து வாழ தொடங்கி உள்ளார்கள். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, அருண்பிரகாசும், இளம்பெண்ணும் வெள்ளலூர் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்தி வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் அருண் பிரகாஷின் நடவடிக்கையில் இளம்பெண்ணுக்கு சந்தேகம் வந்தது. அவரை இளம் பெண் கண்காணிக்க தொடங்கினார். அப்போது தான் அருண்பிரகாஷ்க்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஐடி பெண் ஊழியர், உடனடியாக அருண்பிரகாஷ் உடனான நட்பை துண்டித்தார். இதனால் அதிர்ந்து போன அருண்பிரகாஷ், தான் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவரிடம் ஆசை வார்த்தை கூறினாராம். . ஆனாலும் அந்த ஐடி பெண் அதிகாரி, அருணுடன் பேசுவதை தவிர்த்தார். சம்பவம் நடந்த அன்று அருண்பிரகாஷ், ஐடி பெண் அதிகாரியை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த அருண்பிரகாஷ், இளம்பெண்ணின் செல்போனை பிடுங்கி உடைத்ததுடன் இரும்பு கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து ஐடி பெண் அதிகாரி கோவை துடியலூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான அருண்பிரகாசை தேடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பழகிய இளைஞர், முதல் திருமணத்தை மறைத்து இளம் பெண்ணுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த சம்பவத்தை பார்க்கும் போது, கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பது உண்மையாகிறது. யாரையும் முழுமையாக விசாரிக்காமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு நம்பிவிடுவது பின்னாளில் வில்லங்கமாக வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications