அட கோவையா? மொத்தமா சரிந்தும்.. வாக்குப்பதிவு % அதிகரித்த 4 லோக்சபா தொகுதிகள்.. வெற்றி கணக்கு மாறுதே!
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவு கடந்த 2019 தேர்தலை விட 3 சதவீதம் குறைந்துள்ள நிலையிலும், 4 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. அந்த தொகுதிகளின் கள நிலவரத்தைப் பார்க்கலாம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் வாக்குப்பதிவு சுமார் 3% சரிந்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது அதிகபட்சமாக வாக்குப் பதிவான தருமபுரி தொகுதியில் கடந்த தேர்தலில் 82.33% வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆக, கடந்த முறையை விட தருமபுரியில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இதுபோல, தமிழ்நாட்டில் 35 தொகுதிகளில் கடந்த முறையை விட வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே கடந்த முறையை விட அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளது. கோவை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர் ஆகிய 4 தொகுதிகளில் மட்டுமே கடந்த 2019 லோக்சபா தேர்தலை விட இந்த தேர்தலில் சற்று அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளது.
கோவை: கோவை லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை, திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கோவையில் கடும் போட்டி நிலவி வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் கோவையில் கடந்த 2019 லோக்சபா தேர்தலை விட கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளன. கோவை தொகுதியில் 2019இல் 63.86% வாக்கு பதிவான நிலையில் இப்போது 64.81% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, மொத்தம் உள்ள 21 லட்சம் வாக்குகளில் சுமார் 13 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
பதிவான 13 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகளில் அதிக வாக்குகளைப் பெற்று கோவை எம்.பியாக முடிசூடப்போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் நிலவி வருகிறது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் மலையரசன், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு, பாஜக கூட்டணி சார்பில் பாமகவின் தேவதாஸ் உடையார், நாதக சார்பில் ஜெகதீசன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இங்கு திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன.
கள்ளக்குறிச்சி தொகுதியில் 2019 லோக்சபா தேர்தலில் 78.81% வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இப்போது 79.25% வாக்குப்பதிவு நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் ஆரம்பம் முதலே வாக்குப்பதிவு வேகமாக நடந்து வந்தது. மக்கள் ஆர்வமாக யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.
சேலம்: சேலம் லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி, அதிமுக சார்பில் இளம் வேட்பாளர் விக்னேஷ், பாஜக கூட்டணியில் பாமக சார்பில் அண்ணாதுரை, நாதக சார்பில் மனோஜ் குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
சேலம் தொகுதியில் 2019 லோக்சபா தேர்தலில் 77.87% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இப்போது 78.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் பசுபதி, பாஜக சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், நாதக மகேஸ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
வேலூர் தொகுதியில் 2019இல் 71.32%, இப்போது 2024ல் 73.42% வாக்குப்பதிவு நடந்துள்ளது. வேலூரில் தாமரை - உதயசூரியன் இடையே டஃப் ஃபைட் நிலவுவதாகக் கூறப்படுகிறது. கடந்த முறை ஏசி சண்முகத்தை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார் கதிர் ஆனந்த். இந்த முறை வாக்குப்பதிவு சற்று அதிகரித்துள்ள நிலையில் அது யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications