கோவையில் ஆட்டிசம் பாதித்தவர் உடம்பில் சர்க்கரை தேய்த்து, எறும்பை ஏற்றி, மிளகாய் பூசி.. இவரும் மனிதரா
கோவை: மன வளர்ச்சி குன்றிய நபரை நிர்வாணப்படுத்தி, உடம்பெல்லாம் மிளகாய் பொடியை தூவி, எறும்புகளை கடிக்க வைத்து, 11 பேர் கொண்ட கும்பல், கிரிக்கெட் பேட்டால் சரமாரியாக தாக்கி, கடைசியில் கொன்றே விட்டது.. இது நம்முடைய கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்துள்ள சம்பவமாகும்.. சம்பந்தப்பட்டவர்கள் போலீசில் பகீர் வாக்குமூலமும் தந்துள்ளனர். என்ன நடந்தது?
கோவை சோமனூர் அருகே உள்ளது மாதப்பூர்.. இங்கு வசித்து வருபவர் ரவிக்குமார். என்பவரின் 22 வயது மகன் வருண்காந்த்.. இவர், மனவளர்ச்சி குன்றியவர்.. எனவே, பொள்ளாச்சி பக்கத்திலுள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக வருண்காந்தை சேர்த்திருந்தனர்.

வருண்காந்தை காணவில்லை
இந்நிலையில், வருண்காந்த்தை திடீரென காணவில்லை என்று பெற்றோருக்கு காப்பகத்தில் இருந்து தகவல் வந்தது.. இதனால் பதறிப்போன ரவிக்குமார், இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் செய்தார்... போலீசாரும் அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வருண்காந்தை வலைவீசி தேடி வந்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், எங்காவது வழி மாறி சென்றிருப்பதாகவே நினைத்தனர்.
இது தொடர்பாக அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டபோதுதான், வருண்குமாரை அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்ததை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.. வருண்குமாரை காப்பக நிர்வாகிகளே, அடித்துக் கொன்று, நடுப்புணி அருகிலுள்ள பி.நாகூரில் உள்ள தோட்டத்தில் குழிதோண்டி புதைத்ததும் அம்பலமானது.
தோட்டத்தில் செடி வளர்த்து
இதையடுத்து கடந்த 24ம் தேதி வருண்காந்த்தின் சடலத்தை சம்பந்தப்பட்ட தோட்டத்திலிருந்து போலீசார் தோண்டி எடுத்தனர்... ஆனால், அதற்குள் கொலையாளிகள் தலைமறைவாகிவிட்டனர்.. எனவே, இவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.. இறுதியில், காப்பக நிர்வாகி கிரிராம் (36), நிர்வாகி சாஜியின் தந்தை செந்தில்பாபு (55), காப்பாளர்கள் ரித்தீஷ் (26), சதீஷ் (25), ஷீலா (27), பணியாளர் ரங்கநாயகி (32) ஆகிய 6 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அதேபோல, இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளான சாஜி (32), டாக்டர் கவிதா (52), கவிதாவின் கணவர் லட்சுமணன் (56), மகள்கள் ஸ்ருதி (24), ஸ்ரேயா (26) ஆகிய 5 பேரை 10 நாளைக்கு பிறகு தனிப்படை போலீசார் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று கைது செய்திருக்கிறார்கள். மொத்தமாக கைதான 11 பேர் மீதும் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.. கைதானவர்களிடம் விசாரணையும் நடந்தது.
வாக்குமூலம்
அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம்:தந்துள்ளனர்.. அதில் "கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி வருண்காந்தை அவரது பெற்றோர் எங்களது காப்பகத்தில் அழைத்து வந்து அனுமதித்துவிட்டு சென்றனர்.. ஆனால், வருண்காந்த் எங்களது பேச்சை கேட்காமல் அதிகமாக கோபப்பட்டார். காப்பக நிர்வாகி டாக்டர் கவிதா முகத்தில் எச்சில் துப்பினார்.
இதனால் கடந்த 9ம் தேதி ஆழியாறு சுற்றுலா அழைத்து சென்றபோது வருண்காந்த்தை மட்டும் காப்பகத்திலேயே விட்டு சென்றோம். அதேபோல, ஒரு பிறந்தநாள் விழாவிற்கும் வருண்காந்தை விட்டுவிட்டு, மற்றவர்களை அழைத்து சென்றோம். இது வருண்காந்த்துக்கு ஆத்திரமாகி விட்டது.. எங்களை எல்லாம் பார்த்து கூச்சல் போட்டார். இது எங்களுக்கு கோபத்தை தந்தது.. அதனால் நாங்கள் அவரை பயங்கரமாக தாக்கினோம். அதற்கு பிறகு அவர் சரிவர சாப்பிடவில்லை.
உடம்பில் சர்க்கரை - எறும்பு
எனவே, அவரை அரை நிர்வாணமாக்கினோம்.. உடம்பெல்லாம் சர்க்கரையை தூவி எறும்பை விட்டு கடிக்க செய்தோம்.. பிறகு மிளகாய்களை வாயில் திணித்தோம்.. கிரிக்கெட் மட்டையால் அவரை தாக்கினோம். இதில் மயங்கி விழுந்து, வருண்காந்த் இறந்துவிட்டார்..
இதையடுத்து இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று காப்பக ஊழியர்களை மிரட்டினோம். எனினும், அவர்களது செல்போன்களை வாங்கி, ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டோம். கொலையை மறைப்பதற்காக, அவரது உடலை காரில் ஏற்றி நடுப்பணியில் உள்ள கவிதாவின் தோட்டத்திற்கு கொண்டு சென்று குழிதோண்டி புதைத்துவிட்டோம்.. அதன்மீது செடிகளை நட்டோம்..
இதற்கு பிறகுதான் வருண்காந்தை ஆழியாருக்கு சுற்றுலா அழைத்து சென்றதாகவும், அங்கு காணாமல் போனதாகவும் சொல்லி நாடகமாடினோம்" என்று வாக்குமூலம் தந்தனர்.. இந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.. கைதான 11 பேருமே, தற்போது கோவை ஜெயிலில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications