கோவையில் ஜெயராமனுக்கு நேர்ந்த கொடூரம்.. சினிமாவை மிஞ்சிய ஸ்கெட்ச்! 4 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்
கோவை: கோவையில் நண்பரை கொலை செய்து கிணற்றில் வீசியதாக இரண்டு பேர் சரணடைந்த நிலையில் போலீசார் விசாரணையில் அவர்கள் கூறிய வாக்குமூலம் பொய் என தெரிய வந்தது. இதை தொடர்ந்து கொலை செய்தவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் இடத்தில் உள்ள கிணறு ஒன்றில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நண்பரை கொலை செய்து கல்லைக்கட்டி வீசியதாக பாலமுருகன் மற்றும் முருகவேல் ஆகிய இருவர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
சரணடையும் பொழுது காவல்துறையினரிடம் சம்பவத்தை கூறிய அவர்கள் இறந்தது திருநெல்வேலியை சேர்ந்த ஜெயராமன் என்று தெரிவித்தனர். பாலமுருகன் என்பவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் குதிரை பண்ணை அருகே வசித்து வருகிறார்.

அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சிறையிலும் இருந்துள்ளார். சிறையில் இருக்கும் பொழுது முருகப்பெருமாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு முருகப்பெருமாள் தன்னை தொடர்பு கொண்டு தனது நண்பர் ஜெயராமன் என்பவருக்கு கோவையில் வேலை வேண்டும் என்று தெரிவித்ததாக பாலமுருகன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முருகப்பெருமாள் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரையும் கோவைக்கு வரும்படி பாலமுருகன் கூறியதாகவும் அதனை அடுத்து இருவரும் கோவைக்கு வந்துள்ளார்.
இதனை அடுத்து மூன்று பேரும் மது அருந்திய பொழுது முருகப்பெருமாள், ஜெயராமன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் முருகப்பெருமாள் ஜெயராமனை அடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், பின்னர் இருவரும் பயந்து ஜெயராமனின் உடலில் கல்லைக் கட்டி அருகில் இருந்த தனியார் தோட்டத்து கிணற்றில் வீசியதாக பாலமுருகன் முருகப்பெருமாளும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து கடந்த எட்டாம் தேதி காவல்துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் கிணற்றில் உடலை தேடினர். கிணற்றில் இருந்த நீரை முற்றிலுமாக வெளியேற்றி சுமார் மூன்று மணி நேரத்திற்கு பிறகு ஜெயராமனின் எலும்புக்கூடுகள் மற்றும் அழுகிய நிலையில் இருந்த சில பாகங்களை கண்டெடுத்தனர். தொடர்ந்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் கூறிய வாக்குமூலம் பொய்யென தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உண்மையில் ஜெயராமனை கொலை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், திருநெல்வேலியை சேர்ந்த நியூட்டன்(28), பெனிட்டோ(27), பாலமுருகன்(45), ஜெயராமன்(25) ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர். பாலமுருகன் கோவையில் வசித்து வரும் நிலையில் நியூட்டன்,பெனிட்டோ, ஜெயராமன் ஆகியோர் சென்னையில் இருந்துள்ளனர். நியூட்டன் சென்னையில் காபி கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஜெயராமன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் ஜெயராமன் சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு பெனிடோ, நியூட்டன் உட்பட சில நண்பர்கள் தனியார் நிறுவனம் மூலம் வாகன கடன் பெற்று உதவி புரிந்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஆட்டோ வாங்கிய ஜெயராமன் சரிவர ஆட்டோ ஓட்டாமலும் கடனையும் கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் கடனை செலுத்துமாறு கூறியதை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு பெனிடோ மற்றும் நியூட்டன் ஆகியோர் ஜெயராமனை சென்னை நுங்கம்பாக்கத்தில் வைத்து கடன் பணத்தை தருமாறு கூறியுள்ளனர்.
ஆனால் ஜெயராமன் முறையாக பதிலளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் ஜெயராமனை தாக்கியுள்ளனர். ஜெயராமனுக்கு ஏற்கனவே மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து ஜெயராமனின் உடலை மறைப்பதற்கு முயற்சித்துள்ளனர். அப்பொழுது கோவையில் உள்ள நண்பரான பாலமுருகனை தொடர்பு கொண்டதை அடுத்து உடலை கோவைக்கு எடுத்து வருமாறு பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஜெயராமனின் உடலை கார் மூலம் சென்னையில் இருந்து கோவைக்கு எடுத்து வந்து மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் இடத்தில் உள்ள கிணற்றில் கல்லை கட்டி வீசி உள்ளனர். இதனை அடுத்து ஜெயராமனின் உறவினர்கள் ஜெயராமனை தேட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. உண்மை தெரிந்தால் மாட்டி கொள்வோம் என்று பயந்த பெனிடோ, மற்றும் நியூட்டன் பாலமுருகனின் உதவியை நாடி உள்ளனர். அப்பொழுது பாலமுருகன் இந்த சம்பவத்தில் சரணடைய வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு ஒப்புக்கொண்ட நிலையில் பாலமுருகன் சிறையில் இருந்த போது பழக்கமான முருகபெருமாளை தொடர்பு கொண்டு இதனை தெரிவித்துள்ளார். பின்னர் பாலமுருகன் மற்றும் முருகப்பெருமாள் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்து மது போதையில் கோவையில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். இறுதியில் போலீசார் விசாரணையில் உண்மை தெரிய வந்ததை தொடர்ந்து சரணடைந்த பாலமுருகன் மற்றும் முருகப்பெருமாள் உட்பட கொலை செய்த பெனிடோ மற்றும் நியூட்டன் ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications