கோவையின் முக்கிய பகுதியில் பார்க்கிங் சிஸ்டத்தில் அதிரடி மாற்றம்.. மாதம் மாதம் மாறப்போகுது!
கோவை: கோவை மாநகரில் ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஒருபுறம் மட்டும் வாகனங்களை நிறுத்தும் திட்டம் அமலுக்கு வந்தது. மாதம் மாதம் வாகனங்களை ஒருபுறத்தில் இருந்துமறுபுறத்தில் மாற்றி நிறத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரின் மையப்பகுதியான டவுன்ஹால் பகுதியில் ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, தாமஸ் வீதி, ராஜவீதி, ரங்கே கவுடா் வீதி, இடையர் வீதி போன்ற பகுதிகளில் ஏராளமான கடைகள், வணிக தளங்கள் இருக்கின்றன. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்

டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் வாகனங்கள் நிறுத்தப்படுவதை ஒழுங்கு படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தது. இதையடுத்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் சாலையின் ஒருபுறம் மட்டும் வாகனங்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த புதிய நடைமுறையானது கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இதனை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் ஒவ்வொரு மாதமும் வாகனங்கள் நிறுத்தும் இடம் சுழற்சி முறையில் மாற்றப்படும் என்றும் ஆய்வுக்கு பின் தெரிவித்தார்.
கோவையில் ஒப்பணக்கார வீதியில் வைசியாள் வீதி சந்திப்பு முதல் இடையர் வீதி சந்திப்பு வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த இந்த மாதம் அனுமதி இல்லை. அதே நேரத்தில் இடையர் வீதி சந்திப்பு முதல் மில்ரோடு சந்திப்பு வரை சாலையின் இடது புறத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.
ராஜவீதியில் ஒப்பணக்கார வீதி சந்திப்பு முதல் ரங்கே கவுடர் வீதி வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. ரங்கே கவுடர் வீதி முதல் தேர்நிலைதிடல் வரை மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.
இதேபோல் துணிவணிகர் சங்க பள்ளி தேர்நிலை திடல் முதல் கருப்ப கவுண்டர் வீதி வரை இடதுபுறம் வாகனங்களை நிறுத்தலாம். ஆனால் கருப்ப கவுண்டர் வீதி சந்திப்பு முதல் சலீவன் வீதி வரை இருபுறமும் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. மேலும் ராஜவீதி முதல் மணிக்கூண்டு வரை இருபுறமும் வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது.
அதேநேரம் கருப்ப கவுண்டர் வீதியில் ராஜவீதி சந்திப்பு முதல் வைசியாள் வீதி வரை வலதுபுறமாக வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். பெரியகடை வீதியில் ரங்கேகவுடர் வீதி சந்திப்பு முதல் கருப்ப கவுண்டர் வீதி வரை இடதுபுறம் மட்டும் வாகனங்களை நிறுத்தி வைக்க அனுமதிக்கப்படுகிறது. வைசியாள் வீதியில் ரங்கே கவுடர் வீதி சந்திப்பில் பஸ் நிறுத்தம் எதிரே வலது புறம் மட்டும் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். இந்த வாகன நிறுத்த மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கோவை மாநகர போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications