கோவையில் சீறிய தோட்டா..அலறிய ஆல்வின்! துப்பாக்கி சுடத் தானே ..‘புரியும் மொழியில்’ பேசிய பாலகிருஷ்ணன்
கோவை : கோவையில் தலைமறைவாக இருந்த ரவுடி ஆல்வின் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குற்றவாளிகளையும் ரவுடிசத்தையும் கட்டுப்படுத்த காவலர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்வது பணியில் ஒரு பகுதிதான். பெரிய குற்றங்கள் நடந்து விடக்கூடாது சட்டத்தை பாதுகாக்க துப்பாக்கி பயன்படுத்துவது சட்டத்தில் இடம் உள்ளது என கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,” இன்று அதிகாலை காவல்துறையினரால் சுட்டு பிடிக்கப்பட்ட ஆல்வின் என்பவர் மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் வடசேரி காவல் நிலையத்தில் குற்ற பின்னணி வழக்குகள் உள்ளது.

மேலும் இவர் மீது மூன்று கொலை வழக்குகள் இரண்டு கொலை முயற்சி வழக்குகள் மற்றும் வழிப்பறி வழக்குகள் போன்றவை நிலுவையில் உள்ளது இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி இவர் துப்பாக்கி பயன்படுத்தி கொலை வழக்கு நடைபெற்றது என்பதில் வழக்கு விசாரணை பெற்றது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய ஆல்வின் தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் வழங்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஆல்வின் பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெளி மாநிலத்தில் தலைமறைவாக இருந்தார். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டிருந்தது. தனிப்படை அங்கு சென்ற போது அங்கிருந்து தப்பித்து விட்டார். இன்று அதிகாலை கொடிசியா பகுதியில் பதுங்கி இருந்தது தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அவரை பிடிக்க முயன்ற போது தனிப்படையில் இருந்த தலைமை காவலர் ராஜ்குமாரை கத்தியால் குத்தியதில் கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் தப்பிக்க முயன்ற போது கார்த்திக் எஸ்ஐ அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். மூன்று முறை சுடப்பட்டதில் இரண்டு காலில் 3 குண்டு பாய்ந்தது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சரித்திர குற்ற பின்னணி உள்ளவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறோம். முறையான புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வருகிறோம். ரவுடிகள் நீதிமன்றத்துக்கு வரும்போதும் அங்கேயும் குற்றங்கள் நடக்காமல் இருக்க அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் நடைபெற்ற கொலைக்கு பழி வாங்கும் நோக்கில் எதிர் தரப்பினர் செயல்பட்டு வந்தது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் இது குறித்து தகவலை சேகரித்து பலிக்கு பலி என்ற கொலையை தடுப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆல்வின் கைது செய்யப்பட்டது அடுத்து பழிக்கு பழி வாங்கும் கொலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆல்வின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.ஆனால் தலைமறைவாக இருந்த காரணத்தினால் போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். சமூக வலைதளங்களில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளத்தை ரவுடிசம் குற்றச்சம்வங்களுக்கு பயன்படுத்தாமல் இருக்க தொடர்ந்து கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர
600-க்கும் மேற்பட்டவர்கள் குற்ற பின்னணி இருப்பவர்களாக கண்டறிந்து அவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். கோவையில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரோ வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களோ ரவுடிசம் மற்றும் கட்ட பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. ரவுடிகள் எந்த மாவட்டமாக இருந்தாலும் சரி மாநிலமாக இருந்தால் சரி அவர்கள் மீது காவல்துறை நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
துப்பாக்கி பயன்படுத்தி குற்றங்களை செய்வது போன்ற சம்பவங்கள் அண்மையில் நடைபெறவில்லை. கொலை வழக்கில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது ஆனால் துப்பாக்கியால் கொலை நிகழவில்லை.
குற்றவாளிகளையும் ரவுடிசத்தையும் கட்டுப்படுத்த காவலர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்வது பணியில் ஒரு பகுதிதான். பெரிய குற்றங்கள் நடந்து விடக்கூடாது சட்டத்தை பாதுகாக்க துப்பாக்கி பயன்படுத்துவது சட்டத்தில் இடம் உள்ளது.
பயங்கரமான ரவுடிகளை பின் தொடரும் போது காவலர்களின் பாதுகாப்புக்காக கையில் துப்பாக்கி வைத்துக் கொள்வது. துப்பாக்கி பயன்படுத்துவதற்காக எடுத்துச் செல்லவில்லை தேவைப்படும்போதும் மற்றவர்களையும் காவலர்களின் தற்காப்புக்காகவும் துப்பாக்கி பயன்படுத்துகின்றனர். சட்டபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்க காவல்துறை தயங்காது என்பதை தெரிவிக்கின்றோம்” என்றார்.












Click it and Unblock the Notifications