"ஸ்லீவ்லெஸ் போட்டது குற்றமா".. சட்ட மாணவிக்கு நேர்ந்த அநீதி.. பூமார்க்கெட் வியாபாரிகள் அட்ராசிட்டி
கோவை: கோவை பூமார்க்கெட்டில் ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்து வந்த சட்ட மாணவியிடம் உடை குறித்து கிண்டலாக பேசிய நபரிடம், சட்ட மாணவி கேள்வி எழுப்பும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், சம்பவ இடத்தில் நடந்தது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஜனனி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை, பூமார்க்கெட் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பூ கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளுக்கு ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் தினசரி பூ வாங்க பூ மார்கெட் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பூக்கடைக்கு பூ வாங்க ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்து வந்த சட்ட மாணவி ஒருவரிடம் அங்கிருந்த பூ கடை உரிமையாளர், இப்படியெல்லாம் உடை அணிந்து வரக்கூடாது என பேசியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அந்த பெண் உடை குறித்து கேள்வி எழுப்பிய நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

உடை சரியாகத்தான் இருக்கிறது, உங்களது பார்வையை சரியாக வைத்துக் கொள்ளுங்கள் என அந்த பூக்கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை அந்த பெண்ணுடன் வந்த நபர் செல்போனில் பதிவு செய்தார். இதனையடுத்து பூ மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பாதிக்கப்பட்ட சட்ட மாணவி பெயர் ஜனனி என்பதும், தற்போது வைசியாக்கில் எல்.எல்.பி. முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜனனி, தனது ஆடை குறித்தான விமர்சனம் வைத்த வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர்களுடன் நேற்று புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜனனி கூறியுள்ளதாவது: நான் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர். ஆந்திராவில் உள்ள NVP கல்லூரியில் சட்டம் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். என்னுடைய அம்மா கோவை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். கடந்த 21.09.2025 ஆம் தேதியன்று கோவை மலர் அங்காடியில் திசைகள் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஓவிய பயிற்சியில் கலந்துகொள்ள சென்றேன்.
மேற்படி பயிற்சியை முடித்துவிட்டு சுமார் மதியம் 1 மணியளவில் அங்கிருந்து கிளம்பும்போது மலர் அங்காடியில் விற்பனையாளர்கள் உடையைப் பார்த்து ஆபாசமாக கிண்டல் செய்து கொண்டு 'இப்படி அரைகுறையுமா வரக்கூடாது" என கூறினர். மேலும், தான் அணிந்திருந்த கையில்லாத மேற்சட்டையை ஆபாச நோக்கத்தோடு பார்த்து எல்லோரின் முன்பாக அசிங்கமாக பேசினர்.
நான் அப்படி என்ன ஆபாசமாக உடை அணிந்துள்ளேன் என்று அவர்களிடம் கேட்டபோது இப்படி வந்தால் ஏதாவது செய்துவிடுவோம். மேலும், யாரவது ஏதாவது செய்துவிட்டால் எதையும் கேட்க கூடாது என்று கூறி மிக மோசமாக நடந்து கொண்டார். அவருக்கு ஆதரவாக பேசவந்த நபர்களும் என்னிடம் மோசமாக பேசி பொது இடத்தில் அவமானப்படுத்தினார்கள்.
மேலும், என்னை தாக்கும் நோக்கத்தோடு அடிக்க வந்தார்கள். கையிலிருந்த எனது செல்போனை பறிக்கும் நோக்கத்தோடு கையை பிடித்து இழுத்தார்கள் தடுக்க சென்ற என்னிடத்திலும் மிக மோசமாக நடந்து கொண்டார்கள். மேலும், பொது இடம் என்றும் பாராமல் பாலியல் ரீதியாக
செய்கை செய்து தொல்லை செய்து அச்சுறுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications