Coimbatore Shocker: கோவையில் நடுக்காட்டில் 5 மணி நேரம் தவித்த கல்லூரி மாணவி! நடந்தது என்ன?
கோவை: கோயம்புத்தூர் விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் 5 மணி நேரம் நடுக்காட்டில் பரிதவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாபாதகத்தை செய்த காமுகன்களை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள்.
மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கோவையில் தங்கி ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அவர் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கல்லூரி விடுமுறையால், தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்றாராம்.

இவர்களது கார் கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது அவ்வழியாக போதையில் வந்த 3 ஆசாமிகள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் நின்றிருப்பதை கண்டு அருகே சென்றனர். அங்கு கல்லூரி மாணவியும் ஒரு ஆணும் இருப்பதை கண்டு, அவர்களை வெளியே வருமாறு மிரட்டினராம்.
ஆனால் அவர்கள் போதையில் இருப்பதை அறிந்த இருவரும், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்று காரை எடுத்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து காரை தடுத்து கண்ணாடியை உடைத்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அந்த ஆண் நண்பர் வெளியே வந்ததும் அவரின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளனர். அதில் அவர் தலையில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கி விழுந்துவிட்டாராம்.
தனது ஆண் நண்பரை அரிவாளால் அந்த மூவரும் வெட்டியதை அடுத்து அந்த பெண் அஞ்சியுள்ளார். அந்த மூன்று பேரும் அந்த மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அந்த ஆண் நண்பருக்கு நள்ளிரவு 2 மணிக்கு மயக்கம் தெளிந்து பார்த்த போது அந்த மாணவியை காணாது திடுக்கிட்டாராம். உடனே 100-க்கு போன் செய்து போலீஸாரின் உதவியை நாடினார். சம்பவ இடத்திற்கு பீளமேடு போலீஸார் வருகை தந்தனர்.
அவர்களிடம் அந்த ஆண் நண்பர் நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே போலீஸார் அந்த பகுதியில் தேடினர். அப்போது புதர் மண்டிய இடத்தில் மாணவி உதவிக்கு அழைக்க இயலாமல் அதிகாலை 4 மணி வரை அச்சமடைந்தபடியே இருந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை மீட்ட போலீஸார் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். சம்பவம் நடந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத குடியிருப்புகள் இல்லாத பகுதி என்பதால் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை. எனினும் சுற்று வட்டார பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.
காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை அந்த 3 பேரும் சேர்ந்து சின்னாபின்னப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications