கோயம்புத்தூரில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு.. "மலையேறிய" ஆபீசர்ஸ்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்
கோயம்புத்தூர்: சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்திருந்த "உங்களுடன் ஸ்டாலின்'
திட்டம் முகாம்களில் பல்வேறு சேவைகளை, விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே பெற்று வருகிறார்கள்.. இதுதொடர்பாக நடந்து வரும் முகாம்களில் மகளிர் உரிமைத்தொகைக்கு அடுத்தபடியாக, புதிதாக ரேஷன் கார்டுகளை கேட்டுதான் பலரும் விண்ணப்பிக்கிறார்களாம்.. இதுதொடர்பாகத்தான் தற்போது ஒரு தகவல் வெளியாகி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
குடும்ப அட்டைதாரர்களின் தேவையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. கடந்த வாரம்கூட, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், உணவு வழங்கல் துறை, நுகர்பொருள் வாணிப கழகம், சேமிப்பு கிடங்கு நிறுவனம் போன்றவற்றின், ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம், சென்னையில் நடந்தது.

ரேஷன் கடையில் தரமுள்ள பொருட்கள்
அதில் அமைச்சர் பேசும்போது, நடப்பு நெல் கொள்முதல் சீசன் முடிவடைய உள்ள நிலையில், கொள்முதல் நிலையங்களில் உள்ள, நெல்லை விரைந்து அரிசி ஆலைகளுக்கு அனுப்புமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதேபோல, வாணிப கழக மண்டல மேலாளர்கள், கிடங்கு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், பொது வினியோக திட்ட கூட்டுறவு இணை பதிவாளர்கள், கிடங்குகளில் ஆய்வு செய்து, ரேஷன் பொருட்களின் தரத்தை சோதித்து, அவற்றை கலெக்டரிடம் காட்டி, தரத்தை உறுதி செய்த பிறகுதான், ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று மாவட்ட வழங்கல் அதிகாரிகள் புதிதாக உத்தரவு பிறப்பித்தனர்.
தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய, கிடங்குகளில் உள்ள பொருட்களை, கலெக்டர்களிடம் காட்ட வேண்டும் என்றும் அதற்கு பிறகே ரேணன் கடைகளுக்கு பொருட்களை அனுப்ப வேண்டும் என்றும் மாவட்ட வழங்கல் அதிகாரிகளை, உணவுத்துறை அறிவுறுத்தியிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
புதிய ரேஷன் கார்டுகள்
இந்நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் குறித்த மற்றொரு தகவல் வெளியாகியிருக்கிறது.. அதாவது ரேஷன் கார்டு கேட்டு, பலரும் விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.. தமிழகத்தில் தனி சமையலறையுடன் வசிப்பவருக்கு, ரேஷன் கார்டு வழங்கப்படும் நிலையில், ஆதார் கார்டு இதற்கு கட்டாயம் தேவைப்படும் ஆவணமாகும்.
1.22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.. அவர்களது விண்ணப்பங்கள் அனைத்துமே பெறப்பட்டு நிலுவையில் உள்ளன.
சமீபநாட்களாகவே உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் உரிமைத்தொகை தொடர்பான மனுக்கள், பெறப்பட்டு வருகின்றன. இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்தவர்கள், அதை விரைவாக வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், விண்ணப்பங்களை பரிசீலித்து, கார்டு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உணவு துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, நிலுவை விண்ணப்பங்களில் ஆய்வு முடிவடைந்த 35,000 பேருக்கு ரேஷன் கார்டுகள் அச்சிட்டு வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கையானது, புது கார்டு கேட்டு காத்திருப்போருக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
கோவை 5 தாலுக்காக்கள்
இதனிடையே, கோவையில் உள்ள 5 தாலுகாக்களுக்குட்பட்ட, மலைப்பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களின் இருப்பிடத்துக்கே சென்று, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணிகளை, மாவட்ட நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.
கோவை வடக்கு, மேட்டுப்பாளையம், பேரூர், மதுக்கரை, ஆனைமலை, வால்பாறை ஆகிய 5 தாலுகாக்களில் வசித்து வரும் மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களில் பெரும்பாலானோருக்கு, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் இல்லை என்பது சமீபத்தில் நடந்த ஆய்வில் உறுதியானது..
எனவே, மேற்கண்ட 5 தாலுகா எல்லைக்குட்பட்ட மலைவாழ் வசிக்கும் பகுதிகளில், ஆய்வு மேற்கொண்டு, அம்மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியிருந்தார்..
அதன்படியே, மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு எவ்வளவு குடும்பத்தினர் உள்ளனர்? குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர்? திருமணமான தம்பதியர், குழந்தைகள் எத்தனை பேர்? போன்ற விபரங்களை சேகரித்தனர்.
சான்றிதழ்கள் இணைப்பு
அந்த விவரங்களின் அடிப்படையில் திருமண சான்றிதழ், குழந்தைக்கான பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, போன்றவற்றை வருவாய்த்துறை விதிமுறைகளின்படி தயாரித்து, அதனுடன் போட்டோக்களையும் இணைத்து, ஸ்மார்ட் கார்டு தயாரிக்கப்பட்டது.
பொள்ளாச்சியை அடுத்த திம்மங்குத்து கிராமத்தில் வசிக்கும், 18 பேருக்கு முதற்கட்டமாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு தயாரிக்கப்பட்டு, நேற்றைய தினம் கலெக்டரால் வழங்கப்பட்டது... மற்ற 4 தாலுகாக்களிலும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் துவங்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications