அன்னபூர்ணா ஹோட்டல் மட்டுமல்ல! கிச்சனில் உள்ள பல பொருட்களை கண்டுபிடித்ததே அவர்கள்தான்! இது தெரியுமா
கோவை: அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து மன்னிப்பு கேட்டது இப்போது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கிடையே சீனிவாசனின் பழைய நேர்காணல் ஒன்று இப்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர் அன்னபூர்ணா குறித்துப் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கோவையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் சில கருத்துகளைத் தெரிவித்தார்.

சர்ச்சை: ஒவ்வொரு பொருட்களுக்கு ஒவ்வொரு ஜிஎஸ்டி இருப்பதால் சிரமமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் ஒரே போல ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். கொங்கு ஸ்டைலில் அவர் பேசிய பேச்சு இணையத்தில் டிரெண்டானது. இதையடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்து அவர் மன்னிப்பு கேட்டதாக பாஜக தரப்பு வீடியோவை வெளியிட்டது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இதற்கிடையே அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனின் பழைய நேர்காணல் ஒன்று இப்போது இணையத்தில் பரவி வருகிறது. பிரபல தமிழ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் அண்ணபூர்னா குறித்தும் அதன் வெற்றிக்கான காரணம் குறித்தும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டு இருந்தார்.
பழைய நேர்காணல்: அதில் அவர், "தனிப்பட்ட முறையில் இது யாருக்கும் சொந்தமானது இல்லை. இது கோவை மக்களுக்குச் சொந்தமான ஸ்தாபனம் இதன் காரணமாகவே எங்களைக் கோவையின் பெருமை என்கிறார்கள்" என்று குறிப்பிடுகிறார்.
1940களில் இறுதியில் அவரது தந்தை ஒரு முறை சென்னைக்கு வந்த ஒரு கடையில் மட்டும் வெயில் காலத்திலும் குளிர்ந்த நீர் கிடைத்துள்ளது. அப்போது அது குறித்துக் கேட்ட போது தான் பிரிட்ஜ் குறித்து அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடனே அந்த பிரிட்ஜை வாங்கி வந்து கோவையில் பெட்டிக் கடை நடத்தியுள்ளனர். பிரிட்ஜ் உதவியுடன் அவர்கள் போட்ட நன்னாரி சர்பத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதன் பிறகு மெல்ல அதை டெவலப் செய்ய ஆரம்பித்துள்ளனர். முதலில் கோவையில் இருந்த தியேட்டர்களில் கேன்டீன்களை எடுத்து நடத்தியுள்ளனர். அதன் பின்னரே தனியாக ஹோட்டல் எடுத்து நடத்தியுள்ளனர். அந்த காலத்திலேயே ஹோட்டலில் பல புதுமைகளையும் அன்னபூர்ணா புகுத்தியுள்ளதாம். 1966ம் ஆண்டிலேயே ஸ்டைன்லெஸ் ஸ்டீல் முதலில் அறிமுகப்படுத்தி எப்போதும் சூடாகவே உணவுகளைப் பரிமாறியுள்ளனர்.
உணவுக்கு தனியாக லேப்: மூலப் பொருட்களில் எப்போதும் சமரசம் செய்யாமல் இருந்ததால், குறுகிய காலத்தில் நல்ல பெயரைப் பெற்றுள்ளனர். அவர் அந்த நேர்காணலில் மேலும் கூறுகையில், "40, 45 ஆண்டுகளாக எங்கள் ஹோட்டலில் தினசரி சாப்பிடுவோர் கூட இருக்கிறார்கள். இருப்பினும், அவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இருப்பது இல்லை. அந்தளவுக்குத் தரமான உணவுகளைத் தர நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம்.
இத்தனையும் அன்னபூர்ணா கண்டுபிடிப்பா: எனது அப்பா கிச்சன் பொருட்களுக்காகத் தனியாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து ஆய்வுகளைச் செய்தார். வரும் லாபத்தில் பெரும்பகுதியை அதற்கே செலவிட்டார். அவர் உருவாக்கிய அந்த நிறுவனம் தான் கிரைண்டரை கண்டுபிடித்தது. நீராவியைக் கொண்டு சமைத்தால் பணத்தைச் சேமிக்கலாம் என்பதைக் கண்டுபிடித்தது. இன்ஃப்ரா மூலம் இயங்கும் அடுப்பைக் கண்டுபிடித்தனர்.
இப்போது கடைகளுக்குப் பயன்படுத்தப்படும் பல பர்னர்களை கண்டுபிடித்தோம். ஆனால், நாங்கள் எதற்கும் காப்புரிமை வாங்கவில்லை. அப்போது அதில் பல ஆய்வுகள் நடந்து புதிது புதிதாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதாலேயே நாங்கள் Patents வாங்கவில்லை" என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications
