கோவை கொடூர சம்பவம்: சட்டவிரோத மதுபானக் கூடத்தை சூறையாடிய நாம் தமிழர் கட்சியினர்
கோவை: கோவை விமான நிலையம் பின்புறம் நேற்று இரவில் காரில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை காரின் கண்ணாடியை உடைத்தும், ஆண் நண்பரை தாக்கியும் தூக்கிச் சென்று போதையில் 3 நபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபானக் கூடத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு, அங்கிருந்த பொருட்களை சூறையாடிய சம்பவத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.
கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் காரில் ஆண் நண்பருடன் 19 வயது மதிப்புமிக்க கல்லூரி மாணவி அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக போதையில் வந்த மூன்று இளைஞர்கள் கத்தியால் காரின் கண்ணாடியை உடைத்து இளைஞரை தாக்கி விட்டு பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர். இளைஞர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த வினித் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

கல்லூரி மாணவியை தூக்கிச் சென்ற மூன்று பேர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். போலீசார் தேடுதல் பணியின்போது நிர்வாண நிலையில் இருந்த மாணவி மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பலத்த காயமடைந்த மாணவியின் ஆண் நண்பர் வினித் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறது. இதில் படுகாயமடைந்த இளம் பெண்ணுக்கும், அவரது ஆண் நண்பருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதாலும், சாலைவசதி, தெருவிளக்கு வசதிகள் இல்லாததாலும், அங்கு பல்வேறு சட்டவிரோத சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள புதர்களை மது அருந்தும் இடமாகவும், கஞ்சா போதைப்பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் இடமாகவும் பலர் பயன்படுத்தி வந்துள்ளனர். இப்பகுதியில் போலீஸார் பெரும்பாலும் வரமாட்டார்கள் என்பதால் இரவு வேளைகளில் தனியாக செல்ல, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அச்சப்படும் சூழல் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடை மூடப்பட்டது. இதையடுத்து, அந்த கடையை ஒட்டியிருந்த மதுபான கூடத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.
ஆனால், அந்த மதுபானக் கூடத்தை மூடாமல் வைத்திருந்து, வெளியில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து மதுபான கூடத்தில் வைத்து அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த மதுபானக் கூடத்திற்கு மது அருந்த வந்த நபர்கள் இந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த மதுபானக் கூடத்திற்கு இன்று மாலை வந்த சிங்காநல்லூர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அங்கு வாடிக்கையாளர்களுக்கு மதுபானம், தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ப்ளர் ஆகிய பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாரிடம் சட்ட விரோத மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சரவணன் என்பவரை ஒப்படைத்தனர். மதுபானக் கூடத்தின் உரிமையாளர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் சிங்கநல்லூர் தொகுதி நிர்வாகி நேரு கூறும் போது, "3 பேர் சேர்ந்து ஒரு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு பக்கத்திலேயே இந்த சட்டவிரோத பார் இயங்கி வருகிறது. 2020ம் ஆண்டில் இங்கு டாஸ்மாக் மதுபான கடை இயங்கிய போது, வழிப்பறி முயற்சியில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விமான நிலையம் பலத்த பாதுகாப்பு உள்ள பகுதி. பிரதமர், முதலமைச்சர் என யார் வந்தாலும், விமான நிலையம் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு கிடைக்காதது ஏன்? இந்த இடம் இவ்வளவு மோசமாக உள்ளது கோவைக்கே பெரிய அவமானம்.
இங்கு விற்பனை செய்து கொண்டிருந்தவரை போலீசில் ஒப்படைத்துள்ளோம். பாலியல் வன்கொடுமை நடந்த இடம் மிகவும் அருகில் இருப்பதால், குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இங்கு மதுபானம் வாங்கியவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது." என்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications