ரிசர்வ் வங்கி அறிவிப்பால் கோவை, திருப்பூர் தொழில் அதிபர்கள் மகிழ்ச்சி.. பிரதமர் மோடிக்கு சைமா நன்றி
கோவை: இந்தியப் பொருட்கள் இறக்குமதிக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதால், இந்தியாவில் ஜவுளித் தொழில் ஏற்றுமதியாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மத்திய அரசு ஏற்றுமதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டியைசெலுத்த, ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு காலஅவகாசம் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்காக தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) நன்றி தெரிவித்துள்ளது
தென்னிந்திய மில்கள் சங்கத் (சைமா) தலைவர் துரை. பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை ஏற்றுமதி செய்துவந்த இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள், இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் மீது திடீரென அமெரிக்கா அறிவித்த 50 சதவீத வரி விதிப்பு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

வரலாற்றிலேயே முதல்முறையாக உற்பத்தி நிறுத்தப்பட்டு, பல லட்சம் தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், கடன் மற்றும் வட்டியையும் செலுத்த முடியாமல் தொழில்துறையினர் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர். இந்தப் பிரச்சனையை சமாளிக்க, ஓராண்டுக்கு கடனை திரும்பச் செலுத்த காலஅவகாசமும், 30 சதவீத கூடுதல் கடனையும் வழங்குவதுடன், ஏற்றுமதி சலுகையையும் வழங்க ஜவுளித் துறையினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டியைசெலுத்த, ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு காலஅவகாசம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பெரிதும் உதவும். இதற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், கிரிராஜ் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை நூற்பாலைகள், விசைத்தறிகள் மற்றும் சாய ஆலைகளுக்கும் பரிந்துரைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
45000 கோடி சலுகை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள கோவை மற்றும் திருப்பூர் போன்ற ஏற்றுமதியை மையமாகக் கொண்ட நகரங்களுக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும். சுமார் 45000 கோடி மதிப்புள்ள இரண்டு திட்டங்கள் காரணமாக மலிவான வர்த்த கடன் கிடைக்கும். பிணையமற்ற கடன் உத்தரவாதம், வட்டி மானியமும் கிடைக்க போகிறது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் நடந்தத. அதில், ஏற்றுமதி மேம்பாட்டு திட்டம், ஏற்றுமதியாளர்களுக்கு கடன் உத்தரவாத திட்டம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இந்தியாவில் தயாரிப்பு என்பது உலக சந்தையில் இன்னும் சத்தமாக எதிரொலிப்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த ஏற்றுமதி மேம்பாட்டு திட்டம், சர்வதேச ஏற்றுமதி போட்டியை அதிகரிக்கும்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், முதல்முறை ஏற்றுமதி செய்பவர்களுக்கும், தொழிலாளர் சார்ந்த துறைகளுக்கும் உதவும். அத்திட்டம், பயனுள்ள வழிமுறையை கட்டமைக்க முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கும். மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாத திட்டம், சர்வதேச போட்டித்தன்மையை அதிகரிக்கும். சுமுகமான வர்த்தக செயல்பாடுகளை உறுதி செய்யும். 'தற்சார்பு இந்தியா' என்ற நமது கனவை நனவாக்க உதவும்'. இந்த முடிவு, வினியோக சங்கிலிகளை வலுப்படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளை பெருக்கும்" இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications