கோவையில் ஒரே நாளில் 1.20 கோடி சம்பாத்தியம்.. வீட்டின் உரிமையாளருக்கு கனவிலும் நினைக்காத ட்விஸ்ட்
கோவை: கோவை மாவட்டம் பொங்காலியூரை சேர்ந்த பிரியா என்பவர் தனது மகளுடன் அதே பகுதியில் உள்ள வேல்முருகன் என்பவருடைய வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். பிரியா தனது சொந்தமான நிலத்தை விற்று சுமார் ஒன்றரை கோடி பணத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளார். இந்நிலையில் வாடகைக்கு விட்ட வீட்டுக்குள் புகுந்து ரூ.1.20 கோடி கொள்ளையடித்துள்ளார் வீட்டின் உரிமையாளர். அவரை எப்படி போலீசார் கைது செய்தனர் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வாடகைக்கு குடியிருப்போர் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், சாவியை எடுத்து டூப்ளிகேட் போட்டு, ஆள் இல்லாத நேரத்தில் தங்க நகைகளை, பணத்தை திருடுவது ஆங்காங்கே நடக்கிறது. சில இடங்களில் அபூர்வமாக வீட்டின் உரிமையாளரே பணத்தை திருடுவதும் நடக்கிறது. கோவையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1.20 கோடி பணம் கொள்ளை
கோவை மாவட்டம் பொங்காலியூரை சேர்ந்த 57 வயதாகும் பிரியா என்பவர் தனது மகளுடன் அதே பகுதியில் உள்ள 35 வயதாகும் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்திருக்கிறார். இந்தநிலையில் பிரியா, அவருக்கு சொந்தமான ஒரு நிலத்தை விற்ற பணம் ரூ.1 கோடியே 20 லட்சத்தை ரொக்கமாக தான் வசிக்கும் வீட்டில் உள்ள பீரோவில் வைத்து இருந்திருக்கிறாராம். இதற்கிடையில் வாடகை வீட்டை காலி செய்வது தொடர்பாக உரிமையாளர் வேல்முருகனுக்கும், பிரியாவுக்கும் தகராறு இருந்து வந்ததாம்.
தனிப்படை போலீஸ் விசாரணை
சம்பவம் நடந்த அன்று பிரியா, தனது மகளுடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருக்கிறார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த ரூ.1 கோடியே 20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா, கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர்.அதில் கதவின் பூட்டு உடைக்காமல், சாவியை பயன்படுத்தி திறந்து இருந்ததால் போலீசாருக்கு வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம் எழுந்தது.
வீட்டின் உரிமையாளர் சிக்கியது எப்படி
இதை உறுதி செய்ய வீட்டை சுற்றி உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பிரியா வசித்து வந்த வீட்டு கதவை வேல்முருகன் மாற்று சாவியை கொண்டு திறந்து உள்ளே சென்று ரூ.1 கோடியே 20 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது உறுதியானது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் ரூ.1 கோடியே 20 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கைதான வேல்முருகன், அந்த பகுதியில் தையல் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கோவையில் வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் வீட்டில், வீட்டின் உரிமையாளரே மாற்று சாவி மூலம் ஒரு கோடியே 20 லட்சம் பணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications