வால்பாறை மாணவி கடைசியாக பேசிய வார்த்தை.. 3 ஆசிரியைகளுக்கு விளக்கம் கேட்டு பறந்த நோட்டீஸ்
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடையை சேர்ந்த சக்திவேல் குமரன் என்பவரின் 14 வயது மகள் முத்து சஞ்சனா அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் பள்ளி வகுப்பறைகளில் நடந்த சம்பவத்தை பிடிக்காமல் வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக கூறினார். அவர் கடைசியாக பேசிய வீடியோ வேகமாக பரவிய நிலையில், 3 ஆசிரியைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி தெரிவித்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை பகுதியில் 40 வயதாகும் சக்திவேல் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி வல்சல குமாரிக்கு 35 வயது ஆகிறது. இவர்களுடைய மகள் முத்துசஞ்சனாவுக்கு 14 வயது ஆகிறது. முத்துசஞ்சனா வால்பாறை அருகே உள்ள ரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

கடந்த நவம்பர் 10-ந் தேதி முத்துசஞ்சனா வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது திடீரென உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த மாணவி முத்துசஞ்சனாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் முத்துசஞ்சனா உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன்பு மாணவி முத்துசஞ்சனா, தன்னுடைய வகுப்பு ஆசிரியைகள் கொடுமையால்தான் தீக்குளித்ததாக மாணவி கூறியிருந்தாராம். இதனால் இந்த வழக்கில் விசாரணையின் கோணமே மாறி உள்ளது. மாணவி சாகும் முன்பாக பேசும் போது, கற்றல்குறைவு என்று கூறி தனி மேஜையில் ஆசிரியை அமர வைத்ததால் வேதனை அடைந்தாராம்.
இதுகுறித்து மாணவியின் தந்தை சக்திவேல் குமரன் அளித்த பேட்டியில், எனது மகளின் இந்த முடிவுக்கு 3 ஆசிரியைகள்தான் காரணம். ஒரு ஆசிரியை என் மகளை அவமானமான பேசியிருக்கிறார். விடுமுறை எடுத்துவிட்டு மீண்டும் பள்ளி சென்றபோது, மற்றொரு ஆசிரியை நீ எதற்காக விடுமுறை எடுத்தாய்? என கேட்டு கன்னத்தில் அடித்திருக்கிறார். வேறொரு ஆசிரியை எனது மகளின் உருவம், தலைமுடி குறித்து கிண்டலாக பேசி புத்தகங்களை தூக்கி அவள் மீது எறிந்தாராம். ஆசிரியைகள் இப்படி அடுத்தடுத்து கொடுமை செய்ததால் உயிரை விட்டுவிட்டாள் என்று கூறினார்.
இதுதொடர்பாக பொள்ளாச்சி இடைநிலை கல்வி அதிகாரி மணிமாலா அந்த மாணவி படித்த அரசு பள்ளிக்கு நேரில் சென்று 3 ஆசிரியைகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இதேபோல் வால்பாறை போலீசாரும் தனியாக விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் 3 பேருக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்.
இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி கூறும்போது, மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த பள்ளியின் 3 ஆசிரியைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதுடன், அவர்கள் 3 பேரும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.












Click it and Unblock the Notifications