2026 புத்தாண்டில் கோவைக்கு சூப்பரான குட் நியூஸ் - பிரம்மாண்ட திட்டத்தின் அப்டேட்
கோவை: கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சி காரணமாக கோவைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. முதல்கட்ட பணிகள் வருகிற ஜனவரி மாதத்தில் நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது. கல்வி, மருத்துவம், ஐடி, உற்பத்தி என்று எல்லாவற்றிலும் கோவை முன்னேறி கொண்டிருக்கிறது. இந்தியளவில் வேகமாக முன்னேறும் இரண்டாம் கட்ட நகரங்களில் கோவை இருக்கிறது. இதன் காரணமாக கோவையின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

மேற்கு புறவழிச்சாலை
அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் கோவையின் பல பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் அவிநாசி சாலையில் திறக்கப்பட்டது. கோவை விமான நிலைய விரிவாக்கம் திட்டம் நடந்நது கொண்டிருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டம் நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கு புறவழிச்சாலை திட்டம் தொடங்கியது.
கோவை மதுக்கரை அருகே உள்ள மைல்கல் பகுதியில் தொடங்கி நரசிம்ம நாயக்கன்பாளையம் வரையில் 32.40 கி.மீ தொலைவிற்கு புறவழிச்சாலை அமைப்பது தான் இந்த திட்டம். இதற்கான பணிகள் 3 கட்டங்களாக செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 11.8 கி.மீ தொலைவிற்கு ரூ. 250 கோடி மதிப்பில் முதல் கட்ட பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.
முதல்கட்ட பணிகள்
இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. தற்போதுவரை சுமார் 7 கி.மீ தொலைவிற்கான பணிகள் நடந்து முடிந்துவிட்டன. மீதியுள்ள 4 கி.மீ தொலைவில் பணிகளை முடிக்க வேண்டிய நிலை உள்ளது. அதேபோல மைல்கல் பகுதியில் பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தப் பணிகள் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "மைல்கல் - மாதம்பட்டி இடையிலான 11.8 கி.மீ தொலைவிற்கு விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். இந்த 11.8 கி.மீ தொலைவில், ஒவ்வொரு 100 மீ இடைவெளியிலும் மின் விளக்குகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஜனவரியில் குட் நியூஸ்
புறவழிச்சாலையின் பெரும்பாலான பகுதிகள் நேராக தான் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் தான் வளைவுகள் உள்ளன. அபாய வளைவுகள் உள்ள இடங்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் இருப்பதை போல தடுப்புகள் அமைக்கப்படும். புறவழிச்சாலையை ஒட்டி ஆங்காங்கே ஓடைகள் இருக்கின்றன. மழை நீர் செல்ல வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு சாலையின் நடுவே அரளி செடிகள் நட்டு பராமரிக்கப்படும். கோவையின் இதமான தட்பவெப்பத்தை தக்க வைப்பதற்காக, சாலை அருகில் ஆங்காங்கே மகிழம் மரக்கன்று நடப்படும். முதல் கட்ட பணிகள் வருகிற ஜனவரி மாதத்துடன் நிறைவடையும். அது முடிந்தவுடன் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்." என்றனர்.












Click it and Unblock the Notifications