நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்கணும்.. "GST பன்” மாலையுடன் செல்வப்பெருந்தகை! காங்கிரஸ் ஆர்ப்பாட்டம
கோவை: அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த விவகாரத்தை தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. “நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
கோவை, கொடிசியாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிலதிபர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பேசுகையில், “ஒரே பில்லில் ஒரு குடும்பத்துக்கு வித்தியாச வித்தியாசமான ஜிஎஸ்டி போடுவதால் மக்கள் சண்டைக்கு வருகிறார்கள். பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அதற்குள் க்ரீம் வைத்தால் 18% ஜிஎஸ்டி வருகிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது.

கஸ்டமர் பன் மட்டும் எடுத்துட்டு வாங்க, சீனி, ஜாம் நாங்க போட்டுக்கிறோம் என்கிறார்கள், கடை நடத்த முடியல மேடம். அதனால், ஜி.எஸ்.டி வரியை ஒரே மாதிரி ஆக்கிவிடுங்கள்" என்று கூறினார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. பலரும் மத்திய பா.ஜ.க அரசையும் ஜி.எஸ்.டி வரியையும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், அதற்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். “பன்னுக்கு வரி இல்லை. அதில் க்ரீம் போட்டுக் கொடுத்தால் வரி வேறு விதமாக இருக்கிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது என மிகவும் ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். காதால் கேட்பவர்களுக்கு 'ஆஹா' என்பது போல இருக்கும். அதில் தவறு ஒன்றுமில்லை. அவர் பாணியில் அவர் பேசியிருக்கிறார். கடந்த ஓராண்டாக ஒவ்வொரு உணவு வகைக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதை அமைச்சர்களின் குழு விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளது.
ஹோட்டல் உரிமையாளர்கள் இந்தப் பிரச்னை தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பெரியவர் ஜனரஞ்சகமாக பேசியதால், ஜிஎஸ்டிக்கு பரம விரோதிகளாக இருப்போருக்கு அது ஆதாயமாக தெரியும். விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை. அவரது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
இந்தச் சூழலில் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. பாஜகவினரே பகிந்த அந்த வீடியோவில், அந்த வீடியோவில், நிர்மலா சீதாராமன் மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் உள்ள நிலையில் அன்னபூர்ணா சீனிவாசன், “நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று எழுந்து நின்று கைகூப்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது.
இந்த வீடியோக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும், அன்னப்பூர்னா சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அன்னபூர்ணா சீனிவாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசனை அவமதித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை போராட்டத்தை அறிவித்தார்.
அதன்படி, இன்று கோவை காந்தி பூங்கா, ஆர்.எஸ்.புரம், அன்னபூர்ணா ஓட்டல் எதிரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். அப்போது, பாஜக அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை விமர்சிக்கும் வகையில் “பன் மாலை” அணிந்திருந்தார் செல்வப்பெருந்தகை.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, “ஒட்டுமொத்த ஹோட்டல் நிர்வாகிகளும் சிரமத்தைச் சந்தித்து வருவதாக ஜனநாயகப் பூர்வமாக விமர்சித்த அன்னபூர்ணா தொழிலதிபர் சீனிவாசன் பேசியது தவறு எனக் குற்றம்சாட்டி, அவருக்கு அழுத்தம் கொடுத்து, அவரை வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார்கள்.
அதை விட வக்கிரம், அவர் மன்னிப்பு கேட்டதை வீடியோ எடுத்து அதனை பொதுவெளியில் வெளியிட்டு அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அவரை மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாடு சிறு, குறு தொழிலதிபர்களையும் அவமதித்திருக்கிறார்கள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications