திமுககாரன்னா பைத்தியக்காரனா.. நீ என்ன ரவுடியா?.. போலீஸாரிடம் பொங்கிய திமுக நிர்வாகி
கோவை: கோவை, டவுன்ஹால் பகுதியில் திமுக, அதிமுகவினரிடையே பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், திமுக மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் போலீஸாரிடம் திமுககாரன்னா என்ன பைத்தியக்காரனா. நீ என்ன ரவுடியா. உன் சட்டையை கழற்றாமல் விடமாட்டேன் என்று ஒருமையில் கண்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ளன. இதனால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில், 2022 உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க உள்ளது. அந்தக் கூட்டணி சந்தித்த 4 தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

மறுபக்கம் அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்து திமுகவுக்கு எதிராக போட்டியிடுகிறார்கள். அந்தக் கூட்டணியில் அதிகளவு கட்சிகளை இணைத்து ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளனர். இதுதவிர விஜய் தலைமையிலான தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகளும் திமுகவை எதிர்த்து வருகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதற்காக அதிமுக நிர்வாகிகள் சார்பில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
எடப்பாடி பழனிசாமி டவுன்ஹால் பகுதிக்கு பிரசாரம் செய்ய சென்றிருந்தார். அங்கு ஏற்கனவே திமுக சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே அதிமுகவினர், திமுகவினர் பேனரை மறைத்தபடி தங்கள் பேனரை வைத்ததாக திமுகவினர் புகார் கூறினர். ஒருகட்டத்தில் அதிமுகவினர் வைத்த பேனரை, திமுகவினர் அகற்றியுள்ளனர். இதனால் இரண்டு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், இரண்டு தரப்பினரிடமும் சமாதானம் பேச முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, கட்சிக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கோவை திமுக மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் அப்பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது, கோட்டை அப்பாஸ் அங்கு சீருடையில் இருந்த காவல்துறையினரிடம் கடும் கோபத்தில் பேசியுள்ளார். திமுககாரன்னா என்ன பைத்தியக்காரனா. நீ என்ன ரவுடியா. உன் சட்டையை கழற்றாமல் விடமாட்டேன். மரியாதையா பேசிக்கோ என்று ஒருமையில் கண்டித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தின்போது, உக்கடம் காவல் உதவி ஆய்வாளர் அஜய் சர்மா, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கைக்கூலியாக செயல்படுகிறார் என்று கூறி திமுகவினர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications