கோவையை மொத்தமா ஒதுக்கிட்டாங்க.. திமுகவுக்கு ரிசல்ட் தெரிஞ்சுபோச்சு.. அதிமுக எம்.எல்.ஏ பரபர!
கோவை: கோவையில் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதாலும், மீண்டும் அதிமுகவே வெற்றி பெறும் சூழல் இருப்பதாலும், திமுக கோவையை ஒதுக்கிவிட்டது என அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பங்கேற்காமல் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், சிங்காநல்லூர் ஜெயராமன், கவுண்டம்பாளையம் பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை வடக்கு அம்மன் அர்ச்சுணன், சூலூர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், "மாவட்ட ஆட்சியர் பங்கு பெறாதது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. பதில் கூற அதிகாரிகளும் வரவில்லை. கண்துடைப்பிற்காக நடத்தப்பட்ட கூட்டமாக தான் இருந்தது. கோவை மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு மாவட்ட ஆட்சியரே கூட்டத்திற்கு வராதது சான்று.
கோவையில் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதும், மீண்டும் அதிமுகவே வெற்றி பெறும் சூழலும் இருப்பதால் எந்த வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட 500, ஆயிரம் கோடி பணத்தை வீணடித்துள்ளனர். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் புறநகர் சாலைகள் கைவிடப்பட்டதே இதற்கு உதாரணம். அத்திகடவு குடிநீர் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில் தான் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. திமுக ஆட்சியைப் பிடித்தபோதும், கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளையும் அதிமுக கூட்டணியே கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கோவையை திமுக வசம் ஆக்குவதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக்கினார் முதல்வர் ஸ்டாலின்.
தொடர்ந்து, செந்தில் பாலாஜி கோவையில் முகாமிட்டு, திமுகவை வளர்த்தெடுக்க முயன்றார். அதன் பலனாக, உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியின் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது திமுக. தொடர்ந்து, ஸ்டாலினின் பார்வை கோவை பக்கம் விழுந்து வந்த சூழலில், அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், திமுகவின் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சூழலில் அதிமுக தரப்பு, திமுக கோவைக்கு எதுவும் செய்யவில்லை, தாங்கள் வெற்றி பெற மாட்டோம் என அறிந்து கோவையை திமுக அரசு புறக்கணித்துவிட்டது என்ற கோஷத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவின் இந்த பிரச்சாரம் திமுகவுக்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications