மாதம்பட்டி டூ மலேசியா! கடல் கடந்து கமகமத்த ரங்கராஜின் சமையல்! யார் வீட்டு திருமணம் தெரியுமா?
கோவை: கோவையை சேர்ந்தவரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜின் கைமணம் கடல் கடந்து மலேசியாவிலும் வீசியது.
கோவை மாவட்டம் மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது பல்வேறு பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு கேட்டரிங் சர்வீஸ் செய்து வருகிறார். அவருடைய சமையலில் ஒரு குறை கூட காண முடியவில்லை என அந்த விழாவில் சாப்பிட்டு பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆண்டுக்கு தன்னால் ஒரு படம், இரு படங்களை மட்டுமே கொடுக்க முடியும் என்கிறார். கல்யாண சீசன் இல்லாத நேரங்களில் நடிப்பதற்கு ஷெட்யூல் வகுத்துக் கொள்வேன் என்கிறார். பென்குயின் எனும் படத்திலும் நடித்துள்ளார். இந்த த்ரில்லர் படம் 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் வெளியானது.
யார் இந்த மாதம்பட்டியார்: இவர் "மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட்" எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ரங்கராஜுக்கு அனிமேஷன் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் உணவுத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் பொறியியல் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து 2002 ஆம் ஆம் ஆண்டு முதல் தனது குடும்பத் தொழிலை கவனித்து வருகிறார்.
சமையல் மீது ஈடுபாடு ஏன்: இவருடைய தந்தை மாதம்பட்டி தங்கவேலுவும் சமையல் கலைஞர். சிறுவயது முதலே அவரை பார்த்து பார்த்து தனக்கு சமையலின் மீது ஈடுபாடு அதிகரித்து விட்டது என்கிறார் ரங்கராஜ். இவர் பெங்களூர் சென்று அங்கு ஒரு ஹோட்டலை திறந்து வைத்தார். இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் வரும் போதெல்லாம் சிறிய விழாக்களுக்கு சமையல் செய்து கொடுத்துவந்தார்.

இதைத் தொடர்ந்துதான் ரங்கராஜ், சினிமா ஷூட்டிங்கில் உள்ள யூனிட்டிற்கு சமைத்து கொடுத்தார். தனியொருவராக இதை செய்த அவர் அப்படியே சினிமா தொழிலில் நடிகராக நுழைந்தார். தற்போது பிரபலங்களின் வீட்டுத் திருமணம் என்றாலே மாதம்பட்டி ரங்கராஜை கூப்பிடுங்கள் என சொல்லும் அளவுக்கு அவர் வளர்ந்துவிட்டார்.
யார் வீட்டு திருமணம்: ராஜமவுலி வீட்டு திருமணம், லிங்குசாமி அண்ணன் மகன், நடிகர் கார்த்தி திருமணம், நடிகர் விக்ரம் வீட்டு திருமணம், நடிகர் யோகிபாபு மகன் பிறந்த நாள் விழா, விக்ரம் பட சக்ஸஸ் மீட், சித்த மருத்துவர் சிவராமனின் மகள் திருமணம் உள்ளிட்டவைகள் உள்பட இதுவரை 400 திருமணங்களுக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் சமையல் செய்துள்ளார்.
இவரது நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த கோவை மாரத்தானிலும் கலந்து கொண்டது. பச்சை நிற கொய்யா சட்னியை செய்வதை பார்த்து பலர் இவரை பாராட்டினார். ஹவுஸ் கீப்பீங், கிளீனிங், என அனைத்து சப்ளைகளையும் செய்கிறார். இவரிடம் திருமணத்தை விட்டுவிட்டால் நிம்மதியாக கல்யாண வேலைகளை பார்க்கலாம் என பிரமுகர்கள் தெரிவிக்கிறார்கள்.
பிரதமருக்கு உணவு: கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் செய்து விருந்து அளித்தார். மாதம்பட்டியாருக்கு தற்போது 41 வயதாகிறது. சமையல் தொழிலில் புதுமைகளை புகுத்தினார். சமையல்காரர் என்றால் அழுக்கு பனியன், லுங்கியுடன்தான் இருக்க வேண்டுமா, என்பதை மாற்றி காட்டியவர்.

சிறுவாணி தண்ணீர்: சமையல்காரர்கள் கோட் சூட்டிலும் இருக்கலாம் என்பதை எடுத்துரைத்தவர். கார்ப்பரேட் லெவலில் சமையல் பிசினஸை கொண்டு சென்றுள்ளார். இவருக்கு குரு இவருடைய தந்தை மாதம்பட்டி தங்கவேலுதான். இவருடைய சமையல் ருசியாக இருக்கக் காரணம் சிறுவாணி தண்ணீர்தான் என்கிறார். இதற்காக வெளிநாடு என்றாலும் சரி கப்பலில் சிறுவாணி தண்ணீரை எடுத்துச் செல்கிறார்.
மலேசியாவில் திருமணம்: இதற்கு ஒரு உதாரணம் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி மலேசியா நாட்டை சேர்ந்த இந்தியரான காங்கிரஸ் தலைவர் விக்னேஷ்வரனின் மகள் திருமணம் மலேசியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் அன்ட் டீமே சமைத்துக் கொடுத்தனர். சுமார் 10 ஆயிரம் பேருக்கு தலைவாழை இலை விருந்து வைத்து அசத்தியிருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.












Click it and Unblock the Notifications