கோவை உக்கடத்தில் ரூ.481 கோடியில் ரெடியான பிரம்மாண்ட மேம்பாலம்.. எப்போது திறப்பு தெரியுமா?
கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில், நெரிசலை குறைக்க ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பாலம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் முக்கியமான வணிக மையமான உக்கடம் பகுதி விளங்குகிறது. சென்னையில் திநகரை போல கோவையில் உக்கடம் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. உக்கடத்தை ஒட்டிய பகுதியில் தான் கோவை ரயில் நிலையமே அமைந்துள்ளது. கலெக்டர் ஆபிஸ், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் என ஒரே பகுதியில் அமைந்துள்ளது.

கோவையில் இருந்து கேரளா செல்லும் சாலையாகவும் உக்கடம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மிகஅதிகமாக உள்ள பகுதியாக உள்ளது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கும் உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டும் பணி ரூ.481 கோடி செலவில் 2018-ம் ஆண்டு தொடங்கியது.
முதற்கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை வரை முதல் கட்டமாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்துப்பாலம் முதல் பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளில் 2-வது கட்டமாக மேம்பால பணிகள் நடைபெற்று வந்தது. 2-ம் கட்ட மேம்பாலம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. முதலில் மந்தநிலையில் நடந்த மேம்பால பணிகள் தற்போது முடிவடையும் நிலையை எட்டி இருக்கிறது.
உக்கடம் மேம்பாலம் எப்படி: கோவை உக்கடம் மேம்பாலம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால், ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், உக்கடம் மேம்பாலத்தில் ஏறி செல்வபுரம் பைபாஸ் சாலையை ஒட்டிய இடத்தில் இறங்கி ஒப்பணக்கார வீதியை அடையலாம்.
கரும்புக்கடை முதல் உக்கடம் சந்திப்பு வரை 4 வழித்தடமாகவும், ஒப்பணக்கார வீதியை அடையும் இறங்கு தளம் 2 வழித்தடமாகவும் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்ட மேம்பால பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர் செல்வம் நேற்று ஆய்வு செய்தார்.
இந்த பணிகள் குறித்து அதிகாரிகள் கூறும் போது, தற்போது உக்கடம் மேம்பால பணிகள் 92 சதவீதம் அளவுக்கு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இறுதியில் உக்கடம் மேம்பாலம் வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார்கள். அடுத்த மாத இறுதியில் அல்லது ஜூலையில் உக்கடம் மேம்பாலம் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications