டைம் வேஸ்ட்.. அங்கே ஆளையே காணோமே, யார்கிட்ட கேட்கிறது? அதிசயமா இருக்கே.. திமுக மீது பாய்ந்த எடப்பாடி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணநாயகம்தான் வென்றிருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்
கோவை: சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் திமுக மீது அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். இதனையடுத்து பிப்.27ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் திமுக கூட்டணி சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக கூட்டணி சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேகனா நவனீதன் ஆகியோர் என மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர்.
இதனையடுத்து திட்டமிட்டபடி 27ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,27,537 ஆக இருந்த நிலையில் 1,70,192 பேர் (74.79%) வாக்களித்தனர். இதனையடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமாக 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தொடக்கம் முதல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னணியில் இருந்தார். கடைசியாக 15வது சுற்று முடிவில் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வாழ்த்து
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இந்த தேர்தல் வெற்றி, தோல்வி குறித்த அரசியல் கட்சியின் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பேட்டியின் போது அவர் கூறியதாவது, "திரிபுரா, நாகாலாந்தில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பணநாயகம்
ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்த அளவில் ஜனநாயகம் வெல்லவில்லை. மாறாக பணநாயகம்தான் வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதி தொடங்கி வாக்காளர்களுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தாங்கள் கடந்த 21 மாத ஆட்சியில் சம்பாதித்த பணத்தை தண்ணீர் போல வாரி இறைத்து ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தல்
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் திமுக வெற்றி பெற்றிருக்காது. அதிமுகதான் வெற்றி பெற்றிருக்கும். தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் பல இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த தேர்தலில் நடந்த விதி மீறல்கள் போல வேறு எந்த தேர்தலிலும் நடக்கவில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த திமுக வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்தான். எனவே இந்த தேர்தலை வைத்துக்கொண்டு திமுக மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும்.

வாக்காளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தினமும் காலை மக்களை ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போல பட்டிக்கும், சுற்றுலாவுக்கும் அழைத்து செல்வதால் எங்களால் வாக்காளர்களை பார்க்க முடியவில்லை. வாக்காளர்களை சுயமாக வாக்களிக்கவிடவில்லை. மக்களை நேரில் பார்த்தால்தானே வாக்கு கேட்க முடியும்? வாக்காளர்களை அபகரித்துதான் இந்த வெற்றியை திமுக பெற்றிருக்கிறது. எனவே இது ஒரு அதிசயமான தேர்தல். தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. இப்படியான தேர்தல்கள் ஜனநாயகத்திற்கு பேராபத்தாகும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications