வருமான வரி.. 10 கோடி பணம்.. கோடியில் சொத்துக்கள்.. கோவை தொழில் அதிபரை காலி செய்த என்ஜினீயர்கள்
கோவை: கோவையில் தொழில் அதிபருக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்களை மோசடி செய்த 2 என்ஜினீயர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய பணம் உள்பட 10 கோடி பணத்தை செலுத்தாமல், தொழில் அதிபரை ஏமாற்றியதாகவும் என்ஜினீயர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 40 வயதாகும் ஜி.சி.சிவராஜ் தொழில் அதிபர் ஆவார். இவர் கோவை பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவன அறங்காவலராக இருக்கிறார். ஜி.சி.சிவராஜ்க்கு கடந்த 2014-ம் ஆண்டு நிலத்தை விற்பனை செய்ததற்கு ரூ.5 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற வருமானவரித்துறை நோட்டீஸ் வந்ததாம். அதனை கையாண்டு அதனை முடித்து கொடுப்பதாக சேலத்தை சேர்ந்த அஸ்வின்குமார் என்பவரை சிவராஜை கேட்டிருக்கிறாராம்.

பின்னர் வருமானவரித்துறை கணக்குகளை கையாள அஸ்வின் குமாருக்கு தெரிந்த என்ஜினீயர்களான வசந்த், சிவக்குமார் ஆகியோரை சிவராஜ் தனது அலுவலகத்தில் நியமித்திருக்கிறார். அதன்பின்னர் வருமானவரித் துறைக்கு செலுத்த வேண்டும் என அஸ்வின்குமார் தொடர்ந்து கேட்டதால், சிவராஜ் ரூ.10 கோடியை அஸ்வின்குமாருக்கு வங்கி மூலம் செலுத்தி இருக்கிறார். ஆனால் அந்த தொகையை அஸ்வின்குமார் வருமானவரித்துறை அலுவலகத்திலும் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டாராம்.
மேலும் அஸ்வின்குமார் 13 பேர் கொண்ட கும்பலை சேர்த்துக் கொண்டு சிவராஜுக்கு சொந்தமான கோவில்பாளையம், பொள்ளாச்சி, அவினாசி ரோட்டில் உள்ள வணிகவளாகம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை பவர் பெற்று போலி ஆவணம் தயார் செய்து மோசடி செய்துவிட்டாரம். இப்படி கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை அஸ்வின்குமார் கும்பல் பறித்துவிட்டதாம்.
இப்படி ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்த தொழில் அதிபர் சிவராஜ், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து நடந்த சம்பவங்களை விரிவாக எடுத்துக் கூறி புகார் கொடுத்துள்ளார் . அவரது உத்தரவின் பேரில் கோவை நகர மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் மனோகரன் அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தொழில் அதிபரின் அலுவலகத்தில் வேலை பார்த்து மோசடிக்கு உதவியாக இருந்த என்ஜினீயர்கள் சிவக்குமார், வசந்த் ஆகிய 2 பேரை கைது செய்தனர். கூட்டுசதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மோசடியில் முக்கிய நபரான அஸ்வின்குமார் தலைமறைவாக இருக்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரை கோவை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கோவையைச் சேர்ந்த தொழில் அதிபருக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் பணத்தை மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications