பெண் அதிகாரி பலாத்காரம்.. விமானப்படை அதிகாரியிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி!
கோவை: பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான விமானப் படை அதிகாரியை கோவை போலீசார் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
கோவை பந்தய சாலை பகுதியில் விமானப் படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 பேர் பயிற்சிக்காக வந்தனர்.

பாலியல் வன்கொடுமை
கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னை லெப்டினல் அமித்தேஷ் ஹர்முக் என்ற விமானப் படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக, 28 வயதான பெண் அதிகாரி ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். ஓய்வுக்காக தனது அறைக்கு சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறிய பெண் அதிகாரி கோவை காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

விமானப் படை அதிகாரி கைது
இந்த புகாரின் பேரில் அமித்தேஷ் மீது காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். விமானப்படை சட்டப்படி, விமானப்படை அதிகாரிகளை காவல்துறை விசாரிக்க முடியாது என்பதால் இந்த வழக்கு விமானப்படைக்கு மாற்றி கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி கைதான அமித்தேஷை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோவை காவல்துறையினர் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி நாகராஜிடம் மனு தாக்கல் செய்திருந்தனர்.

நீதிபதி உத்தரவு
இந்த மனு மீதான விசாரணை 23-ம் தேதி நடக்கும் என்று நீதிபதி கூறி இருந்தார். அதன்படி கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விமானப்படை அதிகாரிகள் அனுமதியுடன் அமித்தேஷை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இருவேறு விசாரணை அறிக்கை ஆதாரத்தை திரட்டி ஒன்றை விமானப்படைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

விமானப்படை ஒத்துழைப்பு அவசியம்
விமானப்படை அதிகாரி அமித்தேஷ் விமானப்படை கட்டுப்பாட்டில்தான் இருப்பார் என்று கூறிய நீதிபதி கோவை போலீசாரின் விசாரணைக்கு விமானப்படை முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications