“வேற லெவல்”.. செங்கல்லை கூட விடமாட்டேன் என்ற அண்ணாமலை! கோவையில் மாடியே கட்டிய லுலு மால்! பணிகள் கிடுகிடு
கோவையில் பெரும் பொருட் செலவில் லுலு மால் கட்டுமான பணிகள் துரிததமாக நடந்து வரும் நிலையில் அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
கோவை: உலகளவில் பல்வேறு கிளைகளை கொண்ட லுலு மாலை தமிழ்நாட்டில் திறக்க ஒப்பந்தம் செய்ததற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கோவையில் பெரும் பொருட் செலவில் லுலு மால் கட்டுமான பணிகள் துரிததமாக நடந்து வருகின்றன. இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 4 நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்றார். அங்கு தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்தார்.
அதன் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் பெரும் ஹைபர் மால்களை நடத்தி வரும் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலிக்கு சொந்தமான லுலு இண்டெர்நேஷனல் குழுமம் தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடியை முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.

லுலு குழுமம்
கேரளா மாநிலம் கொச்சின் உட்பட உலகில் 22 நாடுகளில் 230 பிரம்மாண்ட ஹைபர் மால்களை லுலு குழுமம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் மால்களை தொடங்க திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி வரும் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கோவையில் புதிய மால் ஒன்றை தொடங்க லுலு குழுமம் முடிவு செய்து இருக்கிறது.

எதிர்ப்பு தெரிவித்த அண்ணாமலை
இந்த நிலையில், லுலு ஹைபர் மாலை தமிழ்நாட்டில் தொடங்க அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இதனால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்த அவர், பாஜக இந்த விவகாரத்தில் ஆதரவாக இருக்கும் என்றார். தமிழ்நாட்டில் லுலு மாலின் ஒரு செங்கல்லை கூட வைக்க பாஜக அனுமதிக்காது என்றார்.

அனுமதிக்க மாட்டோம்
எந்த நிறுவனத்துக்கும் எதிரான கட்சி பாஜக இல்லை. ஆனால் சிறு வணிகர்கள் லுலு நிறுவனத்தால் காணாமல் போய்விடுவார்கள். லுலு நிறுவனத்தை அனுமதிக்கக் கூடாது என்று துபாயில் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சிறு வியாபாரிகளை அழித்து பெரிய நிறுவனங்களை உருவாக்கும் நோக்கில் வரும் லுலுவை தமிழ்நாட்டிற்குள் பாஜக அனுமதிக்காது." என்றார்.

மோடியை சந்தித்த யூசுப் அலி
அண்ணாமலை இவ்வாறு கூறிய நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி சென்ற லுலு குழும உரிமையாளர் யூசுப் அலி பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். கேரளா மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் லுலு குழுமம் மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் விளக்கமளித்தார்.

உபியில் லுலு மால்
உணவு துறையில் லுலு குழுமத்தின் பங்களிப்பை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியதாக கூறப்பட்டது. அடுத்த ஜூலை மாதமே பாஜக ஆளும் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் லுலு நிறுவனம் புதிய மாலை திறந்தது. இதனை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுமானப் பணிகள் துரிதம்
இதேபோல் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகா மாநிலத்திலும் லுலு மால் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை லட்சுமி மில் பகுதியில் லுலு மால் கட்டுமானப் பணிகள் தொடங்கி துரிதமாக நடைபெற்று வருகின்றன. கீழ் தளம் மற்றும் முதல் தளத்தின் ஒரு பகுதி கட்டப்பட்டு இருக்கும் நிலையில் அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications