யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்
கோவை: சுற்றியுள்ள உலகத்தைவிட மெய்நிகர் உலகமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்ற உலகம் தான் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருக்கின்றன. அவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்களை ரசிக்கிறார்கள். அவர்களை காண விரும்புகிறார்கள். அப்படித்தான் யூடியூபர் மோனலிசாவை பார்க்க போறோம் என்று கோவையில் இருந்து சென்னைக்கு செல்ல முயன்ற 4 பள்ளிக்கூட மாணவிகளை ரயில் நிலையத்தில் போலீசார் மீட்டனர்.
டீன் ஏஜ் பெண்கள், டீன் ஏஜ் பையன்கள் அதிகம் பயன்படுத்துவது மொபைல் போன் தான். மொபைல் போன்களில் அவர்கள் அதிகம் பார்ப்பது சமூக வலைதளங்களை தான். சமூக வலைதளங்களான யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்றவை பள்ளி, கல்லூரி மாணவர்களின் மனதை ஆக்கிரமித்துள்ளது.

மாணவர்கள் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களை அதிகமாக பின்தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருப்பதை பெருமையாகக் கருதுகிறார்கள். இந்தநிலையில், பள்ளிக்கூட மாணவிகள் பெண் யூடியூப் பிரபலம் ஒருவரை சந்திப்பதற்காக ரயிலில் சென்னை வர முயன்ற சம்பவம் நடந்திருக்கிறது.
கோவை மாணவிகள்
கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 4 மாணவிகள் 7-ம் வகுப்பு படிக்கிறார்கள். 4 மாணவிகளும் நெருங்கிய தோழிகள் ஆவார். அவர்கள் பெற்றோரிடம் கூறி செல்போன் வாங்கி, இன்ஸ்டாகிராமில் கணக்குகள் தொடங்கி பலரை நண்பர்களாக சேர்த்து பேசி வந்துள்ளார்கள். இதில் ஒருவருக்கு சென்னையைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் மோனலிசா (வயது 22) மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவர் பதிவேற்றும் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்த அந்த மாணவி, இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து அடிக்கடி பேசியும் வந்துள்ளாராம்.
வீட்டில் இருந்து ஓட்டம்
பின்னர் இதை தனது தோழிகளிடம் கூறியதால், மற்ற 3 பேரும் யூடியூபர் மோனலிசாவை பின்தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்தனர். இதனால் அந்த 4 மாணவிகளுக்கும் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டுள்ளனர் அதற்காக அவர்கள் சென்னை வர முடிவு செய்து, வீட்டில் இருந்து திடீரென எஸ்கேப் ஆனார்கள்.
கண்டுபிடித்த போலீஸ்
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கோவை மாநகர போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அதில், மாணவிகள் கோவை ரயில் நிலையத்துக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அங்கு சென்ற போலீசார், 4 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யூடியூபரிடம் விசாரணை நடத்த முடிவு
இது குறித்து கோவை மாநகர போலீசார் கூறும்போது, மாணவிகள் 4 பேரும் யூடியூபர் மோனலிசாவை பார்க்க சென்னை வருகிறோம் என்று அவரிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் வாருங்கள் என்று சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. இது உண்மையா எனறு விசாரிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக யூடியூபர் மோனலிசாவிடமும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளோம். இதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. விசாரணை முடிவில் அவர் அந்த மாணவிகளை வர சொன்னார் என்பது தெரியவந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள்.












Click it and Unblock the Notifications