சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்... கோவை போத்தனூர் வழியாக 7 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
கோவை: கார்த்திகை மாதம் பிறந்தநிலையில், பலரும் இன்று முதல் பல ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மறுபுறம் ரயில்களும் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது இந்த ரயில்கள் அனைத்தும் சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனூர் வழியாக இயக்கப்பட இருக்கிறது. அதன்விவரங்கள்:

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சார்லபள்ளியில் இருந்து வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள்(25ம் தேதி) மாலை 5.30 மணிக்கு கோட்டயம் சென்றடையும். மறுமார்க்கமாக, கோட்டயத்தில் இருந்து வருகிற 25-ந்தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரயில், புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 2.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும்.
ஹைதராபாத்தின் சார்லபள்ளியில் இருந்து நாளை (செவ்வாய்கிழமை) முதல் ஜனவரி 13-ந்தேதி வரையில் (செவ்வாய்கிழமை மட்டும்) காலை 11.20 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் செல்லும் வகையில் ரயில் இயக்கப்பட உள்ளது. கொல்லத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடைய உள்ளது.
அதேபோல் ஹைதராபாத்தின் சார்லபள்ளியில் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற ஜனவரி 19-ந்தேதி வரை (திங்கட்கிழமை மட்டும்) மதியம் 12 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் ஜனவரி 21-ந்தேதி வரையில் (புதன்கிழமை மட்டும்) அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 10.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும்.
இதேபோல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா டவுனில் இருந்து இன்று (திங்கட்கிழமை), டிசம்பர் 1, 8, 15, 22, 29, ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் மாலை 5.30 மணிக்கு கோட்டயம் சென்றடையும். கோட்டயத்தில் இருந்து நாளை (செவ்வாய்கிழமை), டிசம்பர் 2,9,16,23,30, ஜனவரி 6,13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்படும் செல்லும் ரயில் மறுநாள் இரவு 11 மணிக்கு காக்கிநாடா டவுன் சென்றடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.
அதேபோல் ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்தில் இருந்து வருகிற நவம்பர் 21,28 டிசம்பர் 26, ஜனவரி 2 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் செல்லும். கொல்லத்தில் இருந்து வருகிற நவம்பர் 23,30, டிசம்பர் 28, ஜனவரி 4 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு மச்சிலிப்பட்டினம் சென்றடையும்.
ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்தில் இருந்து டிசம்பர் 5,12,19, ஜனவரி 9,16 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து டிசம்பர் 7,14,21, ஜனவரி 11,18 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் ரயில்மறுநாள் மதியம் 12.30 மணிக்கு மச்சிலிப்பட்டினம் சென்றடையும்.
ஆந்திர மாநிலம் நரசாபூரில் இருந்து வருகிற 23-ந்தேதி முதல் ஜனவரி 18-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து நாளை (செவ்வாய்கிழமை) முதல் ஜனவரி 20-ந்தேதி வரையில் (செவ்வாய்கிழமை மட்டும்), அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7 மணிக்கு நரசாபூர் சென்றடையும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications