"இரண்டாவது தொழிற்புரட்சி.!" மொத்தமாக மாறும் கோவை.. ஸ்பெஷல் பிளானை இறக்கும் தமிழக அரசு! செம
கோவை: கோவை நகரம் இப்போது கிட்டத்தட்ட இரண்டாவது தொழிற்புரட்சிக்கு ரெடியாகி வருகிறது. இது கோவை நகரை விரைவான வளர்ச்சி மட்டுமின்றி, நகரத் திட்டமிடலையும் சிறப்பாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.
நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் கோவை இருக்கிறது. தொழில் நகரமான கோவையில் 25,000க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. அதற்காகக் கோவை முற்றிலும் தொழில் மயமாக்கப்பட்ட நகரம் என்று கருத முடியாது.

பெரும்பாலான தொழிற்சாலைகள், குறிப்பாக பொறியியல் மற்றும் ஜவுளி துறை தொழிற்சாலைகள் கணபதி மற்றும் சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிகமாக இருக்கிறது.. அதேநேரம் மற்ற பகுதிகள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்தவையாகவே இருந்தது.
கோவை தொழிற்சாலைகள்: ஆனால், இந்த நிலை மெல்ல மாற தொடங்கியுள்ளது. நீலம்பூர் முன்பு ஒரு வறண்ட புறநகர்ப் பகுதியாக இருந்தது. ஆனால், இப்போது அது ஆட்டோமொபைல் மற்றும் மின்சார பம்ப் உற்பத்தித் துறையின் மையமாக உருவெடுத்துள்ளது. நீலம்பூர் மட்டுமல்ல, பிற புறநகர்ப் பகுதிகளும் விவசாயப் பொருளாதாரத்திலிருந்து மெல்ல தொழில்துறைப் பொருளாதாரமாக மாறுகிறது. கோவையில் நடக்கும் இந்த தொழில்துறை விரிவாக்கம் பெரும்பாலும் புறநகர்ப் பகுதிகளில் நடப்பது மற்றொரு நல்ல விஷயமாகும்.
புறநகர் பகுதிகள்: சமீபத்தில் தமிழ்நாடு அரசு கோவைக்கு மாஸ்டர்பிளான் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கோவையில் உள்ள எட்டு புறநகர்ப் பகுதிகள் பொருளாதார வளர்ச்சிக்கான பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. நீலம்பூர் உட்பட மூன்று பகுதிகள் ஆட்டோமொபைல், மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தித் தொழில்களுக்கான மையமாக மாறியுள்ளது.
அதேபோல செட்டிப்பாளையம், கல்லாப்பாளையம் உள்ளிட்ட 4 பகுதிகள் மின்சார பொருட்களின் மையமாக மாறியுள்ளது. சர்க்கார் சமகுளம் மற்றும் கண்ணம்பாளையம் ஆகியவை பதப்படுத்தும் தொழில்களான மையமாக மாறுகிறது.
அமைதியான புறநகர் பகுதிகள்: சில காலம் வரை அமைதியாக இருந்த சரவணம்பட்டி மற்றும் கீரநத்தம் ஆகியவை ஐடி மையமாகவும் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் இடிகரை ஆகியவை பம்ப் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மையமாகவும் மாறியுள்ளது. இதுபோல சிமெண்ட் தொழிலுக்கு மதுக்கரை, எஃகு மற்றும் ரசாயன தொழிலுக்கு சோமையம்பாளையம் தொழில் மையமாக உருவெடுத்துள்ளது. இப்போது ஒட்டுமொத்த கோவையும் மொத்தமாக மாறியுள்ளது.
முன்பு தொழிற்சாலைகள் ஒரே பகுதியில் குவிந்து இருந்த நிலையில், இப்போது ஒவ்வொரு துறை தொழிற்சாலையும் ஒவ்வொரு பகுதியில் அமைந்துள்ளது. இது கோவை எந்தளவுக்கு படுவேகமாக வளர்ச்சியடைகிறது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. சிறு குறி தொழிற்சாலைகள் மட்டுமின்றி மிகப் பெரிய தொழிற்சாலைகளும் கூட கோவை பக்கம் படையெடுத்து வருகிறது. உதாரணமாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டின் கிடங்குகள் செட்டிபாளையத்தில் அமைந்துள்ளன,
ஏன் முக்கியம்: வரும் காலத்தில் இந்த தொழிற்துறை வளர்ச்சி மேலும் வேகமடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது கோவையின் விரைவான வளர்ச்சி மட்டுமின்றி சிறந்த நகரத் திட்டமிடலை உருவாக்க உதவியாக இருக்கும் என்று தொழில்துறையினர் கூறுகின்றனர். அதாவது முன்பு நகர் பகுதிக்குள் இருக்கும் தொழிற்சாலைகள் கூட புறநகரை நோக்கி வருகிறது. இது நகருக்குள் ஏற்படும் டிராபிக்கை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் கோவையில் இந்த வளர்ச்சி சில சவால்களையும் உருவாக்கியுள்ளது. உதாரணமாக டிராபிக்கை சொல்லலாம். பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சாலை முறையாக இல்லாதது. பொது போக்குவரத்திற்குப் பேருந்தைத் தவிர வேறு எந்த வசதியும் இல்லாமல் இருப்பது இதற்குக் காரணமாகும். இது தவிரக் குடிநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் வேறு பிரச்சினைகளாக மாறியுள்ளன.












Click it and Unblock the Notifications