இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு வந்த ஆசை.. ஒப்பந்ததாரர் செய்த தரமான சம்பவம்.. அதிர்ந்த கோவை
கோவை: கோவை அருகே தனியார் கோவில் ஒன்றை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்று கொடுத்த போது பெண் உதவி ஆணையர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் சுரேஷ் குமார் (வயது 52). இவரது சமூகத்துக்கு சொந்தமான கோவில், கோவை அருகே பாப்பம்பட்டியில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் நிலங்கள் உள்ளன. மேலும் இந்த நிலங்கள் மூலமாக ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருமானம் வரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் பாப்பம்பட்டியில் உள்ள இந்த கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சுரேஷ் குமார் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிலர் கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்கள் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டது தொடர்பாக உதவி ஆணையர் இந்திராவை சந்தித்து பேசினர். அப்போது இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக தெரிகிறது. எனினும் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் சுரேஷ் குமார் அடிக்கடி உதவி ஆணையரை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
அப்போது கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ரூ.3 லட்சம் லஞ்சம் வேண்டும் என்று உதவி ஆணையர் இந்திரா கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்குளான சுரேஷ் குமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
அதற்கு சுரேஷ் குமார், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி உள்ளார். இதற்கு அவர் ஒன்றரை லட்சம் ரூபாய் தந்தால் போதும், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக தெரிகிறது. இதற்கு சுரேஷ் குமார் சம்மதம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வந்தார். ஆனாலும் அவருக்கு லஞ்சம் கொடுக்க மனமில்லை. இதனால் நைசாக இது பற்றி கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் தெரிவித்தார்.
இந்த புகாரை பெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷ் குமாரிடம் கொடுத்து அனுப்பினர். அவர்கள் கொடுத்த யோசனையின் படி, ரசாயனம் தடவிய பணத்துடன் கோவையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்ற சுரேஷ் குமார் பணத்தை இந்திராவிடம் கொடுத்தார்.
அந்த பணத்தை அவர் வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி ஆணையர் இந்திராவை கையும், களவுமாக கைது செய்தனர். தனியார் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு லஞ்சம் கேட்டு வாங்கிய பெண் உதவி ஆணையர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications