கோவைக்கு மிக அருகில்.. கலர் கலரா மோசடி.. ஜாக்குவார் காருடன் ரியல் எஸ்டேட் அதிபர் கைது
கோவை: கோவையில் தவணை முறையில் பணம் கட்டினால் வீட்டுமனை தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் தங்கராஜை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஜாக்குவார் சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த சேனலை திருப்பினாலும், சமூக வலைதளங்களை ஓபன் செய்தாலும் முதலில் வருவது ரியல் எஸ்டேட் விளம்பரங்களாகத்தான் இருக்கும். கை விரல்களில் பளபளக்கும் பெரிய பெரிய மோதிரங்கள், பிரேஸ்லெட், வாட்ச், கழுத்தில் தடிமனான செயின்கள், வெள்ளை சட்டை, கூலிங் கிளாஸ் என பார்க்கும்போதே பெரிய ஆள்தான் போல என்பது போன்று ரியல் எஸ்டேட் அதிபர்கள் தோற்றமளிப்பார்கள்.

சென்னை, கோவைக்கு மிக அருகில் என்ற வாசகங்களோடு மக்கள் முன் தோன்றும் இவர்களில் சில மோசடி நபர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சபீமகாலமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது அனைவரது கனவாகவும் உள்ளது. லோயர் கிளாஸ் முதல் அப்பர் கிளாஸ் வரை வீடு என்பது ஒரு சென்டிமென்டாகப் பார்க்கப்படுகிறது.
தங்களின் கனவு இல்லத்துக்காக தங்களது உழைப்பில் இருந்து கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேமிக்கும் மக்கள் அங்கீகாரம் பெறாத சில நிறுவனங்கள் மூலம் மோசடி செய்யப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில், கோவையில் தவணை முறையில் பணம் கட்டினால் வீட்டுமனை தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் தங்கராஜை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரது ஜாக்குவார் சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், டாடாபாத் மற்றும் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோகுலம் கார்டன் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர் தங்கராஜ். வீட்டுமனைகள் வாங்க பல்வேறு மாதநாந்திர தவணைத் திட்டங்களை இவர் அறிவித்துள்ளார். இந்த தவணைத் திட்டங்களில் பலரும் சேர்ந்துள்ளனர்.
இதையடுத்து, அந்தத் திட்டத்தில் சேர்ந்தவர்களை அழைத்துச் சென்று வீட்டுமனைகளை தங்கராஜ் காண்பித்துள்ளார். பின்னர், மாதம் தோறும் அவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக கடந்த 2012 ம் ஆண்டு ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் உள்ள நிலத்தை தவணை முறையில் விற்பதாக கூறி பணம் பணம் வசூலித்துள்ளார்.
ஆனால், பணம் கட்டிய நபர்களுக்கு வீட்டுமனையை பதிவு செய்து கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து பணம் கட்டி ஏமாந்த கோவையைச் சேர்ந்த பிரசன்னகுமாரி உட்பட 30 க்கும் மேற்பட்ட மக்கள் தங்களை 70 லட்சம் வரை மோசடி செய்து விட்டதாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கோவை ரத்தினபுரி போலீசார், ரியல் எஸ்டேட் அதிபர் தங்கராஜை கைது செய்ததுடன் அவரது ஜாக்குவார் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், கோகுலம் கார்டன் ரியல் எஸ்டேட் நிதி நிறுவனத்தின் மேலாளர் நாகராஜ் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications