ஜிடி நாயுடு மேம்பாலத்தில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. கமிஷனர் சொன்ன குட் நியூஸ்
கோவை: கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் விபத்துகளை தடுப்பதற்கு திட்டமிட்டு வருவதாகவும், வேகமாக செல்பவர்களை கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்தில் கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் நடைபெற இருப்பதாகவும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறுவர்களுக்கான பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. இந்தப் பூங்காவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தைகளுக்காக சிறிய பூங்கா சி எஸ் ஆர் நிதியிலிருந்து துவங்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஊழியர்கள் மற்றும் புகார் அளிக்க வருபவருடன் வரும் குழந்தைகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தீபாவளியை முன்னிட்டு வழக்கமான பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரண உடையில் குற்றத் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் தங்களுடைய பொருட்களை பாதுகாக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
முன்னாள் குற்றவாளிகள் உள்ளனரா என்பதையும் கண்காணித்து வருகிறோம். ஆய்வாளர்கள், உதவி ஆணையர்கள், துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, இடையர் வீதி, வைசாள் வீதி போன்ற பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஒப்பணக்கார வீதியில் உள்ள போத்தீஸ் ஜவுளிக்கடை அருகே கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜிடி நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்டபோது உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களுக்கு வாகனங்கள் செல்லும் வழிகள் தெளிவாக தெரியவில்லை. பாலத்தை பார்ப்பதற்காக கோல்டுவின்ஸ் வரை சென்று விட்டு மீண்டும் திரும்பி பாலத்தில் வந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடுத்த நாள் 10 ஆம் தேதி மாலை போக்குவரத்து சரி செய்யப்பட்டது. காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, சிக்னல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிக்னல்கள் அமைத்த பிறகு போக்குவரத்து நெரிசல் இருக்காது. பழைய மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்குதளத்தில் மேம்பாலத்தில் யு டர்ன் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் அமைத்தவுடன் பாலத்தில் இருந்து இறங்குபவர்கள் சுற்றி வராமல், நேரடியாக நீதிமன்றம் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதனால், யு டர்ன் சர்வீஸ் சாலை வழியாகவும், அவினாசி சாலையில் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் எம்எல்ஏ அலுவலகம் வழியாகவும், ஓசூர் சாலையில் திரும்பி எல்ஐசி சிக்னலில் இருந்தும் வருவார்கள். இதற்கு பதில் நேரடியாக அனுப்புவதற்கு சோதனை செய்து வருகிறோம்.
இதன் மூலமாக ஜங்ஷனில் இருக்கின்ற நெரிசல் குறையும். புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் ஆங்காங்கே செய்து வருகிறோம். கோல்டுவின்ஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொட்டிபாளையம் பிரிவில் டிராபிக் சிக்னல் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து நெடுஞ்சாலை பொறியாளர்களிடம் பேசி வருகிறோம். சர்வீஸ் சாலையையும் விரிவுபடுத்தி தருவதாக அவர்கள் கூறியுள்ளார். மேம்பாலத்தில் சரியான அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும். நவ இந்தியாவில் இறங்குவதற்கு பதிலாக உப்பிலிபாளையத்திற்கும், நவ இந்தியாவில் இறங்கி கணபதி செல்கின்றவர்கள், ஜிடி மேம்பாலத்தில் இறங்கி காந்திபுரம் செல்கின்றவர்கள் நேராக உப்பிலிபாளையம் வருகின்றனர்.
அதிகப்படியான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இறங்குவது சரியாக ஒருமுறை தெரிந்தால், இந்த போக்குவரத்து நெரிசல் குறையும். அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். ஏஐ தொழில் நுட்பத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வேக அளவு கண்காணிக்கப்படும்.
பாலத்தில் செல்கின்றவர்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் வேகமாக வருபவர்களின் நேரம் குறையும். அதை வைத்து கேமராவில் கண்காணித்து வழக்கு பதிவு செய்யப்படும். அதனால் பொதுமக்கள் பாலத்தை எச்சரிக்கையாகவும், வேகத்தை குறைத்து பயன்படுத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications