கோவையில் செருப்பை துடைக்கச் சொல்லி முஸ்லிம் மாணவி அவமதிப்பா? தலைமை ஆசிரியை விளக்கம்
கோவை: கோவை துடியலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செருப்பை துடைக்கச் சொல்லி பள்ளி மாணவி அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை விளக்கம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் துடியலூர் அசோகபுரத்தில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்திருக்கிறது. இங்கு 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் 7-ம்வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் அபிநயா என்பவரும், ராஜ்குமார் என்பவரும் மாட்டுக்கறி சாப்பிடுவியா நீ , அப்ப உனக்கு திமிர் அதிகமாக தான் இருக்கும் எனக் கூறி மாணவி அணிந்திருந்த புர்கா மூலம் ஷூவை துடைக்க வைத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி தனது பெற்றோருடன் மாவட்ட முதன்மை கல்லி அதிகாரியை நேரில் சந்தித்து, தன்னிடம் ஆசிரியை ஒருவர் மத வேறுபாடு காட்டுவதாக புகார் அளித்தார். அந்த மனுவில் மாணவி கூறுகையில், நான் சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவள். துடியலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறேன். இந்த நிலையில் எங்கள் பள்ளி வகுப்பு ஆசிரியை என்னிடம் அடிக்கடி மதரீதியாக விரோதம் காட்டி வருகிறார்.
அந்த ஆசிரியை என்னை நேரில் வரவழைத்து அவரது செருப்பை துடைக்க சொல்லி வற்புறுத்தினார். இதற்கு நான் மறுத்து விட்டேன். எனவே ஆத்திரம் அடைந்த ஆசிரியை என்னை அவதூறாக பேசி தாக்க வந்தார். மேலும் என் தந்தை செய்யும் தொழில் குறித்து அவதூறாக பேசி ஏளனம் செய்தார். இந்த சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது. மேலும் எனது கல்வித்திறனும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே நான் இதுகுறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியையிடம் நேரடியாக புகார் அளித்தேன். ஆனாலும் அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் கோவை மாவட்ட கல்வித்துறை உயரதிகாரிகள் இதுதொடர்பாக நேரடி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி தனது மனுவில் கூறியிருந்தார்.
மாணவி புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி இன்று நேரில் சென்று விசாரித்தார். மாணவி, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் அவர் தனித்தனியாக விசாரித்தார். மாணவிகளிடம் விசாரித்தார்.
இதனிடையே துடியலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில், குறிப்பிட்ட மாணவியின் தரப்பில் அவரது பெற்றோர் அளித்தள்ள புகார் பொய்யானது. எதற்காக இந்த புகார் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. புகாரில் குறிப்பிட்டது போன்று எந்த சம்பவங்களும் இங்கு நடக்கவே இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications