ஷாக்.. ஐஎஸ் கொடி! சுவற்றில் வரையப்பட்ட ‘சிக்னல் கோட்’! ஜமேஷா முபினின் வீட்டில் அதிர்ந்த அதிகாரிகள்!
கோவை : கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜமேஷா முபின் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி வரும் நிலையில், உயிரிழந்த ஜமேஷா முபின் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஞாயிறன்று அதிகாலை கார் ஒன்று தீ பற்றியதில் அதில் இருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கார் தீ பற்றியதாக கூறப்பட்டது.
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காரில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது யார் என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இதனையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, எடிஜிபி தாமரைன் கண்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.

ஜமேஷா முபின்
விபத்து தொடர்பாக சென்னை தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். காரில் எரிந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆணிகள் கோலிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் உக்கடம் கோட்டைமேட்டை சார்ந்த ஜமேஷா முபின் என தெரியவந்தது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலணாய்வு முகமை விசாரணை மேற்கொண்டதும் தெரிய வந்தது.

வலுவான ஆதாரம்
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதை அடுத்து என்ஐஏ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஜமேஷா முபின் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் உயிரிழந்த ஜமேஷா முபின் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

ஐஎஸ்ஐஎஸ்
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. இதன்காரணமாக அவர் தனது வீட்டில் ஐஎஸ்ஐஎஸ் கொடியில் உள்ள சின்னங்களை வரைந்து வைத்து உள்ளார். மேலும் கேரள சிறையில் உள்ள அசாருதீனுடன் இவருக்கு நெருங்கிய நட்பு இருந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவில் தீவிரமாக இருந்து உள்ளனர்.

பட்டியல் தயார்
இதன்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தனது கூட்டாளிகளுடன் இணைந்து கோவையில் அசம்பாவிதங்கள் ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கலாம் என்று என்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கேரள சிறையில் உள்ள அசாருதீனை கடந்த 2019ஆம் ஆண்டு முதல் யார் யார் சந்தித்தினர், அவர்களின் விவரம், ஜமேஷா முபின் கேரளாவிற்கு எங்கெல்லாம் சென்றார் யாரை சந்தித்தார் உள்ளிட்ட விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications