ஜனநாயகன் தெலுங்கு பதிப்பை பார்த்தேன்.. சென்சாரில் நெருக்கடி தரும் அளவிற்கு ஒன்றும் இல்லை.. சீமான்!
கோவை: நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு சென்சாரில் நெருக்கடி தரும் அளவிற்கு படத்தில் ஒன்றும் இல்லை என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் தெலுங்கு பதிப்பான பகவந்த் கேசரி படத்தை பார்த்துவிட்டதாக கூறிய சீமான், சென்சார் சான்றிதழுக்கு இழுத்தடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றர். அ.வினோத் உருவாக்கியுள்ள இந்தப் படம், கமெர்ஷியல் படமாக உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தின் 80 சதவிகித காட்சிகள் தெலுங்கில் வெளியான பாலகிருஷ்ணா பகவந்த் கேசரி படத்தில் தழுவலாக இருக்கிறது. இந்தப் படத்தின் வசனத்தை விஜய்யே எழுதி இருக்கிறார். மலேசியாவில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய்யின் கடைசி படம் என்பதால், அவரது ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஜனநாயகன் படம் இன்னும் 2 நாட்களில் வெளியாகவிருக்கும் சூழலில், படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளிக்கப்படவில்லை. கடந்த மாதமே தணிக்குழு படத்தை பார்த்த பின்னரும் கூட, இன்னும் சான்றிதழ் அளிக்கப்படவில்லை.
இதனால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு திமுக மற்றும் பாஜகவே காரணம் என்று விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஜனநாயகன் படத்திற்கு சென்சாரில் நெருக்கடி தரும் அளவிற்கு படத்தில் ஒன்றும் இல்லை.
ஜனநாயகன் படத்தின் தெலுங்கு பதிப்பான பகவந்த் கேசரி படத்தை பார்த்தேன். சென்சார் சான்றிதழுக்கு இழுத்தடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏ சான்றிதழோ, யு/ஏ சான்றிதழோ அளித்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார். விஜய்க்கு ஆதரவாக சீமான் கருத்து தெரிவித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications