கோவையில் வாழ்வது என்பது கனவு சார்.. 20 வருடங்களில் நடந்த தலைகீழ் மாற்றம்
கோவை: 2003-2004 பார்த்த கோவை, வெறும் 20 வருடங்களில் தலைகீழாக மாறி உள்ளது. சென்னையை போல் கோவையில் பாலம் என்று எங்குமே இருக்காது. ஒண்டிப்புதூர் ரயில்வே மேம்பாலத்திற்காக வாகனங்கள் அப்போது இருகூரை சுற்றி செல்லும். அங்கும் ரயில்வே கேட்தான். அப்போது அந்த இடம் மட்டுமல்ல.. மொத்த கோவையும் மாறி உள்ளது.
கோயமுத்தூர் மாநகர் 20 வருடங்களுக்கு முன்பே நல்ல நகரம் தான்.. கோவை கணபதி பகுதியில் ஏராளமான புதிய தொழில் நிறுவனங்கள் வேகமாக முளைத்து வந்தன.. சரவணம்பட்டி எல்லாம் அப்போது கோவைக்கு பக்கத்தில் உள்ள கிராமம் போல் இருந்தது..

மேட்டுப்பாளையம் சாலையிலும் பெரிய அளவில் நிறுவனங்கள் இருந்தது இல்லை.. ஒண்டிப்புதூர் பாலத்தை தாண்டினால் கோவை முடிந்துவிடும். அவினாசி சாலையில் சின்னியம்பாளையம் வரை தான் கோவை மாநகரம் இருந்தது.. சுற்றியுள்ள கிராமங்கள் எல்லாம் அப்படியே இருந்தன. ஆனால் 20 வருடங்கள் கழித்து இப்போது கோவை எப்படி இருக்கிறது ஒவ்வொரு பகுதியாக சென்று பார்த்தேன். நான் கண்ட காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது.
நான் முதலில் போன இடம் ரேஸ் கோர்ஸ் சாலையில், ஞாயிறு இரவு அள்ளவு கூட்டம்.. சென்னைக்கு மெரினா என்றால் கோவைக்கு ரேஸ்கோர்ஸ் சாலை என்று சொல்லாம்.. குடும்பம் குடும்பமாக மக்கள் படை எடுக்கிறார்கள். நள்ளிரவு நேரங்களிலும் சர்வ சாதாரணமாக அங்கு நடைபயிற்சி செல்கிறார்கள்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் கடைகள் மற்றும் கட்டமைப்புகளை எல்லாம் மிக நவீனமயமாக இருந்தது.எங்கும் பசுமையான மரங்கள் சூழ, கோவையின் மையப்பகுதி ரம்மியமாக இருந்தது. சென்னையில் கூட இப்படி ஒரு ரிலாக்ஸ் இடம் இல்லையே என்று யோசிக்க வைத்தது.
சரி கோவை நகரம் எப்படி இருக்கிறது என்று திங்கள் அன்று உலாவினேன்.. முதலில் ஆரம்பித்த இடம் சரவணம்பட்டி.. சரவணம்பட்டி பகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் இருந்தன. மிகப்பெரிய அளவில் ப்ரோஜோன் மால் இருந்தது.. சாலைகள் அகலமாக இல்லாத காரணத்தால் காலை நேரங்களில் விழி பிதுங்கியது. சிவானந்தபுரம் தொடங்கி காந்திபுரம் வரை நெரிசல் அதிகமாகவே இருந்தது. காந்திபுரம் முதல் சரவணம்பட்டி வரையில் மிகப்பெரிய அளவில் கடைகள், வணிக நிறுவனங்கள் முளைத்திருந்தன.. காந்திபுரம் அடையாளமே மாறிபோயிருந்தது. காந்திபுரம் சிக்னலில் மேம்பாலங்கள் முளைத்திருந்தன. காந்திபுரம் மட்டுமல்ல.. திருச்சி சாலையில் சுங்கம் பகுதியில் பெரிய மேம்பாலம் இருந்தது. இதேபோல் மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூரிலும் மேம்பாலம் இருந்தது.

அவினாசி சாலை சென்னை அண்ணாசாலைக்கு நிகராக மாறி இருந்தது. கோவையில் மையப்பகுதியில் இருந்து கோவை நகரம் வெளியே செல்லும் பகுதி வரை மேம்பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருவதை காண முடிந்தது. கோவை நகரம் அவினாசி சாலையில் நீலம்பூரை தாண்டி கருமத்தம்பட்டி வரை விரிவடைந்து இருப்பதை காண முடிந்தது. திருச்சி சாலையில் சூலூர் வரையில் கோவை நகரம் அசுர வளர்ச்சி அடைந்திருந்தது. தடாகம் சாலை, மருதுமலை சாலை எல்லாம், நம்ப முடியாத அளவிற்கு மாறிக்கிடந்தது. கடந்த 10 வருடங்களில் ஏராளமான மேம்பாலங்கள் போடப்பட்டிருந்தது.
கோவை நகரின் பிரதான சாலைகளை தாண்டி சிறிய சாலைகளில் கூட ஏராளமான வாகன நெரிசல் இருந்தது. கோவை என்றாலே கல்லூரிகளின் நகரம் என்ற பெயர் உள்ளது.. அதை நிரூபிக்கும் வகையில் எங்கு பார்த்தாலும் கல்லூரிகள் காணப்பட்டன. பல்லாயிரம் பேர் படிக்கும் கல்லூரிகள் நிறைய வளர்ந்திருப்பதால், பிஜி ஹாஸ்டல்கள், ரூம்கள் போர்டுகளை அதிக அளவில் காண முடிந்தது. நவ இந்தியா சிக்னலிலும், ஹோப் காலேஜ் பகுதியும் இன்றைய 2 கே கிட்ஸ்களின் செல்லப்பிள்ளையாக இருந்ததை காண முடிந்தது..
கோவையில் கடந்த 20 வருடங்களில அசுர வளர்ச்சி ஏற்பட்டிப்பது தெரிந்தது. மக்கள் தொகை, மற்றும் வாகன நெருக்கத்தை பார்க்கும் போது கண்டிப்பாக சுமார் 30 லட்சம் பேர் இருப்பார்கள் என்று தெரிகிறது. ஏராளமான வணிக நிறுவனங்கள் கோவையை நோக்கி வருவதால் கோவை இன்னும் 10 வருடங்களில் இப்போது உள்ளதைவிட இருமடங்கு வளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
கோவையை பொறுத்தவரை சென்னையில் உள்ளது போல் புறநகர் ரயில் சேவைகள் தொடங்கலாம். இதேபோல் மெட்ரோ ரயிலும் உடனே தொடங்க வேண்டியது அவசியம் ஆகும்.. சென்னை மட்டுமல்ல,, கோவையும் பல லட்சம் மக்களின் கனவு நகரமாகும்.. வாழ்வாதார தொழில்கள் வலுவாக உள்ள நகரமாக கோவை உள்ளது. பிழைக்க வரும் அத்தனை பேரையும் இன்முகத்துடன் வரவேற்கும் நகரமாகவும் இருக்கிறது. எனவே உள்கட்டமைப்புகள் இன்னமும் பெரிய அளவில் மாற வேண்டியது அவசியம் ஆகும்.












Click it and Unblock the Notifications