கோவை - பொள்ளாச்சி சாலையில் அதிரவைக்கும் திருட்டு சம்பவங்கள்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்
கோவை: கோவை - பொள்ளாச்சி சாலையில் ஒரே நாளில் 14 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் கதிகலங்கிப் போயுள்ளனர். பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பண்டிகைக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்றிருக்கும் நபர்களின் வீடுகளைக் குறிவைத்து கொள்ளைச் சம்பவம் நடைபெறுகின்றது.

ஏற்கனவே அரை நிர்வாணக் கோலத்தில், கூர்மையான பெரிய பெரிய ஆயுதங்களுடன் திருடர்கள் பரபரப்பாக சாலைகளில் சுற்றும் காட்சி வெளியாகி கோவை மக்களை பதைபதைப்பில் ஆழ்த்தியது. அண்மையில் மருதமலை அருகே பூட்டிய வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சம்பவம் அரங்கேறியிருந்தது.
பீளமேடு பகுதியில் அரை நிர்வாணக் கோலத்தில் வெறும் டவுசர் மட்டும் அணிந்துகொண்டு பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து பொருள்களை திருடிவிட்டு திருடர்கள் வெளியேறிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. அதேபோல, செயின் பறிப்புச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. கோவையில் திருட்டு, கொள்ளை, செயின் பறிப்புச் சம்பவங்கள், போதைப் பொருட்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், கோவை - பொள்ளாச்சி சாலையில் ஒரே நாளில் 14 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை - பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட எல்.ஐ.சி. காலனியில் அடுத்தடுத்து உள்ள கடைகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள ஹோட்டல், மெடிக்கல் ஷாப், ஜெராக்ஸ் கடை, கொரியர் அலுவலகம் என 14 கடைகளின் ஷட்டரின் பூட்டுகளை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதைப் பாரத்து அதிர்ச்சியடைந்த கடை வியாபாரிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சுந்தராபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கடையில் இருந்த கல்லாப்பெட்டி மற்றும் உண்டியலில் இருந்து பணத்தை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். பொருள்கள் எதையும் திருடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
திருட்டுப்போன பணம் எவ்வளவு, வேறு ஏதேனும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் 14 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications