அரசியலமைப்பை மாற்ற நினைத்தவரை.. அதை வணங்க வைத்தது தான் நம் வெற்றி: மு.க.ஸ்டாலின்
கோயம்புத்தூர்: லோக்சபா தேர்தல் வெற்றி மூலம், அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்தவரை, அரசியலமைப்பு சட்டத்தின் முன்பு தலை குணிய வைத்திருக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெற்று பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மத்தியில் ஆட்சியை அமைத்தது. அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பார்த்தால் திமுக மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 221 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. வடமாவட்டங்களான திருவள்ளூர், அரக்கோணம் மத்திய மாவட்டங்களான பெரம்பலூர், கரூர், திருச்சி கொங்கு மண்டலமான கோவை, நாமக்கல், நீலகிரி, தென் மாவட்டங்களான மதுரை, தென்காசி, தூத்துக்குடி ஆகியவற்றில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் திமுக வழக்கத்தை விட அதிக வாக்குகளை பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
அதிமுக வலுவாக இருப்பதாக கருதப்படும் மேற்கு மண்டலத்திலும் திமுக அதிக வாக்குகளை வென்றிருக்கிறது. இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று முப்பெரும் விழா கோவையில் நடபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
"இந்த லோக்சபா தேர்தல் வெற்றி என்பது கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலை நினைவூட்டுகிறது. அப்போது ஆளும் கட்சியாக அதிமுக இருந்தது. இருப்பினும், அந்த தேர்தலில் 40க்கு 40 வெற்றியை தலைவர் கருணாநிதி பெற்று தந்தார். தோல்விக்கான காரணத்தை உணர்ந்து ஜெயலலிதா மக்கள் விரோத நடவடிக்கையில் இருந்து பின்வாங்கினார்கள்.
மத்தியில் வாஜ்பாய் ஆட்சியமைப்பார் என்று கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால், அவர் ஆட்சியமைக்க முடியாத நிலையை நாம் உருவாக்கினோம். தற்போதும் அதே சூழலைதான் உருவாக்கியிருக்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை புரட்சியாளர் அம்பேத்கரின் சட்ட புத்தகத்தின் முன்பு தலைகுனிந்து வணங்க வைத்திருக்கோம். இதை தலைவர் கருணாநிதி பாணியில் சொல்ல வேண்டும் என்றால் இந்தியா கூட்டணியின் 41வது வெற்றி.
நமது தொடர் வெற்றிக்கு காரணம் கொள்கை உறவோடு கடந்த 5 தேர்தல்களில் தொடரும் கூட்டணி ஒற்றுமைதான். இந்த மேடையில் உள்ள தலைவர்கள் இடையே இருப்பது வெறும் கூட்டணி உறவு அல்ல. கொள்கை உறவு. இந்த தேர்தலில் நமது வெற்றியை தடுக்க கூட்டணி கட்சிகளை மிரட்டினார்கள். இதற்கு வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வங்கி கணக்குகளை முடக்கினார்கள். டெல்லி, ஜார்கண்ட் முதல்வர்களை கைது செய்தனர்.
தேர்தல் அறிவித்த பிறகு விதிகளை மீறி மக்களிடையே பிரிவினை உண்டாக்கும் வகையில் பிரசாரம் செய்தனர். சிறுபான்மை சமுதாயத்தினரை தரக்குறைவாக பேசினார்கள். உத்தர பிரதேசத்திலும், ஒடிசாவிலும் தமிழர்களை கொச்சைப்படுத்தினர். ஏராளமான பொய் செய்தி, அவதூறுகளை பலகோடி ரூபாய் செலவில் வாட்ஸ்அப்பில் பரப்பினார்கள். இவ்வளவு செய்தும் பாஜக வாங்கியது 240 தான். இந்த 240 மோடியின் வெற்றி அல்ல. மோடியின் தோல்வி" என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications