ஆமா.. இங்க இருந்த ஸ்பீட் பிரேக்கரை எங்கே காணோம்..? வியந்துபோன கோவை மக்கள்.. விஷயம் இதுதான்
கோவையில் சில இடங்களில் உள்ள வேகத்தடைகள் திடீரென அகற்றப்பட்டு வரும் நிலையில் அதற்கான காரணம் என்ன என்பது தற்போது வெளியாகி உள்ளது.
கோவை: கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வேகத்தடைகள் (ஸ்பீட் பிரேக்கர்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் இன்று பல இடங்களில் வேகத்தடைகள் பெயர்த்து எடுக்கப்பட்டன. இதுபற்றி விசாரித்தபோது வேகத்தடைகள் பெயர்த்து எடுக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கோயம்புத்தூரில் புகழ்பெற்ற ஈஷா யோகா மையம் உள்ளது. கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஈஷா யோகா மையத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவால் நிறுவப்பட்ட 112 அடி உயரத்தில் ஆதி யோகி சிலை உள்ளது.
இந்த பிரமாண்டமான ஆதியோகி சிலையை பிரதமர் மோடி கடந்த 2017ம் ஆண்டில் மகா சிவராத்திரியில் திறந்து வைத்தார். தற்போது இது புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் இருந்து வருவோரும் ஈஷா யோகா மையம் சென்று ஆதியோகி சிலையை பார்த்து வருகின்றனர்.

மகாசிவராத்தி கொண்டாட்டம்
இந்நிலையில் தான் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் ஜக்கி வாசுதேவ் மூலம் ஈஷா யோகா மையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழாவிலும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வருகின்றனர்.

ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்பு
இந்த ஆண்டு நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்க உள்ளார். விழாவில் பங்கேற்க வரும் 18 ம் தேதி டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் மதுரை வரும் ஜனாதிபதி காரில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். அதன்பிறகு மதுரை விமானநிலையத்தில் இருந்து விமானத்தில் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளம் வந்திறங்கி அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஈஷா யோகா மையம் செல்ல உள்ளார்.

5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஈஷா வளாகத்தில் உள்ள லிங்க பைரவி, தியானலிங்கம், 112 அடி உயரம் உள்ள ஆதியோகி சிலை உள்ளிட்டவற்றை ஜனாதிபதி திரெளபதி முர்மு பார்வையிட்டு சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். விழாவை முடித்து கொண்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு சூலூர் விமானப்படை தளம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். இந்நிலையில் தான் ஜனாதிபதி வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனாதிபதிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வேகத்தடைகள் அகற்றம்
மேலும் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக ஜனாதிபதியின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினர் விரைவில் கோவை வருகை தர உள்ளனர். இந்நிலையில் தான் கோவை ஈஷா யோகா மையத்துக்கு ஜனாதிபதி திரெளபதி முர்முவின் வருகையையொட்டி பல இடங்களில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளன. அதன்படி கோவை வடவள்ளி முல்லை நகர் சோதனைச்சாவடி முதல் நரசிபுரம் வரை சாலையில் உள்ள வேகத்தடைகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications