Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீக்க வேண்டியது காலனி என்ற வார்த்தையை அல்ல.. மக்கள் மனதில் உள்ள அழுக்கை.. மாற்றம் எப்போது வரும்

Subscribe to Oneindia Tamil

கோவை: காலனி என்ற சொல்லை அரசு நீக்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் நீக்க வேண்டியது காலனி என்ற சொல்லை அல்ல.. மக்கள் மனதில் உள்ள அழுக்கை தான் நீக்க வேண்டும். கோவையில் சாய்பாபா காலனி, பிரஸ் காலனி, சிவானந்தா காலனி, டீச்சர்ஸ் காலனி, ரயில்வே காலனி என பல காலனிகள் உள்ளன. கோவை மட்டுமல்ல பல ஊர்களில் காலனிக்கள் உள்ளன. அந்த காலனியையும், ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் காலனியையும் மக்கள் ஒன்றாக பார்ப்பது இல்லை. காலனி என்று சொல்லவே கூச்சப்படும் அளவிற்கு நிலைமை இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை..

காலனி என ஏன் தனியாக இருக்கு? எங்களுக்கும் நகர் என்று வைக்கலாமே என கடந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய இளம்பெண் ஒருவர் ஊடகம் ஒன்றில் தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.ஒரே ஊர்தான்.. நாம் மட்டும் ஏன் ஒதுக்குபுறமாக இருக்க வேண்டும்... நகர் என்று வைக்கலாமே.. ஏன் காலனி என்று வைக்கிறார்கள்... நீங்கள் காலனியா என்று கேட்கிறார்கள்.. நகர் என்று கேட்பதற்கும்..காலனி என்று கேட்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது என்று கேள்வி எழுப்பி இருந்தார். இது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

Not just Coimbatore there are colonies in many towns but the view on SC colonies differs

கோவையில் சாய்பாபா காலனி, பிரஸ் காலனி, சிவானந்தா காலனி, டீச்சர்ஸ் காலனி, ரயில்வே காலனி என பல காலனிகள் உள்ளன. அதேபோல் ஈபி காலனி, ஸ்டேட் பேங்க் காலனி என பல காலனிகள் உள்ளன.பொதுவாக காலனி என்னும் சொல்லின் பொருள் ஆதிக்கம் என்று கூறுவார்கள். ஆனால் சமூகத்தில் பொருள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.


சாதியை கூறுவதே அவமானம்

காவல் நிலையங்களிலும் சரி, அரசு அலுவலகங்களிலும் சரி, ஜாதி குறித்து விசாரிக்கும் போது, உயர் சாதியினர் தங்கள் சாதி இதுதான் என்று தைரியமாக சொல்கிறார்கள்... ஆனால் பட்டியல் சமூகத்தினரிடம் அதே கேள்விக்கு பதில் சொல்லும் போதே, எஸ்சி என்று கூறும் போது, மனம் உடைந்து போகிறார்கள். ஏனெனில் அந்த நேரத்தில் அவர்கள் தங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலை ஒருபுறம்.. மறுபுறம் ஒருசிலரின் பார்வையும், பேச்சும் உடனே மோசமாக மாறுபடும்.. அதுவும் ஒரு காரணம்.

திருமணம்

அண்மையில் நீயா நானாவில் பெண் ஒருவர் தனது மகனுக்கு யாராக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பதாக ஆவேசமாக பேசினார். ஆனால் நீயா நானாவில் பேசிய பட்டியல் இன பெண், தான் பட்டியல் இனம் என்று சொன்ன உடன், அவரது உடல் மொழியே உடனடியாக மாறியது. அவர் கணவரிடம் கேட்க வேண்டும் என்றார்.. இது அவருக்கு மட்டுமல்ல பலருக்கும் உள்ள மனப்பான்மை.. எம்பிசியில் உள்ளவர்கள் பிசி பெண்ணை திருமணம் செய்வதில் பிரச்சனை இருப்பது இல்லை..ஆனால் பட்டியல் சமூகத்தினரை திருமணம் செய்வது சகஜமாக இருப்பது இல்லை.. இன்றும் பலரது பார்வை மாறவே இல்லை.

வீடு சுத்தம்

அதேபோல் சில வீடுகளில் பட்டியல் சமூகத்தில் உள்ள சாதிகளை குறிப்பிட்டு, அவர்கள் வீடு போல் வைத்திருக்கிறாய் வீட்டை என்று மோசமாக திட்டுவதும் நடக்கிறது. அவர்கள் வீடு குறித்து பொதுப்புத்தியும் தவறாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதையும் நீயா நானாவில் பேசிய பெண் தான் கூறியிருந்தார். அதுவும் இன்று வரை பல ஊர்களில் நடக்கிறது.. பட்டியல் இனத்தவரின் சாதி பெயரை அந்த பையன் மகனே, இவள் மகனே என்று ஆவேசமாக சொல்வதே தவறான பொருளாகவும், இழிவாகவும் இந்த சமூகத்தில் இன்று வரை தொடர்கிறது.

காலனி குறித்து கேள்வி

அதேபோல் காலனியாக பல ஆண்டுகளாக மக்கள் ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது தொடர்கிறது. இதுபற்றி நீயா நானாவில் பேசிய பட்டியல் சமூக பெண் பேட்டி ஒன்றில் காலனி என்ற வார்த்தை எந்த அளவிற்கு பட்டியல் சமூகத்தை பாதிக்கிறது என்பதை கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

காலனி பெயர் நீக்கம்

இந்நிலையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு மற்றும் காலனி என்ற பெயரை நீக்குவது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் பேசியதற்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகையில்,
இந்த மண்ணின் ஆதி குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக 'காலனி' என்ற சொல் பதிவாகி இருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறி இருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

மக்கள் மாற வேண்டும்

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு உள்ளது என்றாலும், காலனி என்ற சொல்லை நீக்கி விட்டால் எல்லாம் மாறிவிடுமோ என்று கேட்காதவர்கள் இல்லை. ஏனெனில் மௌண்ட் ரோடு அண்ணா சாலையாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஜெமினி மேம்பாலம் அண்ணா மேம்பாலமாக மாறி பல வருடம் ஆகிவிட்டது. ஏன் ஓஎம்ஆர் சாலை ராஜீவ் காந்தி சாலையாக மாறிவிட்டது. ஆனால் இன்று அதே பெயரில் தான் மக்கள் அழைக்கிறார்கள்..

குலப்பெருமை

அந்த வகையில் என்ன தான் காலனி என்ற சொல்லை நீக்கினாலும், மக்கள் மாறுவார்களா என்பது கேள்விக்குறித்தான்.. மக்கள் மனதில் உள்ள சாதி என்பது குலப்பெருமை பேசும் அடையாளமாக இருப்பது மாறும்வரை, பட்டியல் சமூக மக்களும் நம்மை போலவே ஒன்றுதான் என்ற எண்ணம் அவர்களுக்கு வரும் வரையில் எந்த சட்டமும் தீர்வுகளை ஏற்படுத்தாது என்பதே கசப்பான உண்மை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+