கோவையில் நடக்கும் பிரம்மாண்ட கூட்டம்! பக்கா பிளான் உடன் தயாராகும் ஓபிஎஸ்.. கோவை செல்வராஜ் பரபர
சென்னை: அதிமுகவில் உட்கட்சி குழப்பம் இன்னும் கூட தொடரும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
Recommended Video
அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வரும் உட்கட்சி மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. சில காலமாகவே ஓபிஎஸை பல நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ள போதிலும், அதை எடப்பாடி தரப்பு தொடர்ந்து மறுத்தே வருகிறது.

கோவை செல்வராஜ்
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகி கோவை செல்வராஜ், "ஒட்டுமொத்த தொண்டர்களும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் எனப் பலமுறை கூறிய பின்னரும் ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த இயக்கத்தைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி! அவர் தாறுமாறாகப் பேசியும் கட்சியினுடைய நிர்வாகிகளைத் தொண்டர்களை மதிக்காமலும் உதாசீனப்படுத்தும் வகையிலும் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

அழைப்பு
அதிமுகவில் நீண்ட காலமாக நிர்வாகிகளாக இருப்பவர்களையும் ஜெயலலிதா உடன் பணியாற்றிய முன்னாள் நிர்வாகிகள், மா.செ.க்கள், எம்பி, எம்எல்ஏக்களை எடப்பாடி தொடர்ந்து புறக்கணிக்கிறார். அதேநேரம் மறுபுறம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்றுக் கழகத்தின் நிர்வாகிகள் அவரோடு இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளனர்.

கம்பெனி இல்லை
ஒன்றிய நகரச் செயலாளர்கள் தலைமையில் தொண்டர்கள் ஓபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 28 ஆண்டுகளாக ஜெயலலிதா இருந்த பொதுச் செயலாளர் பதவியில் யாரையும் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதற்காகவே கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி இருந்த நிலையில், குழப்பத்தை உண்டாக்கி கட்சியை கபளீகரம் செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஒரு கம்பெனியை போல் நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

எந்த கொம்பனாலும்
அவரது திட்டத்தை முறியடித்து, ஓபிஎஸ் நீதிமன்றம் சென்று கட்சியைத் தொண்டர்களின் எண்ணத்தைக் காப்பாற்றி இருக்கிறார். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இருக்கும் வரை எந்த சக்தியாலும் எந்த கொம்பனாலும் கட்சியைக் கையகப்படுத்த முடியாது. கட்சியை கம்பெனி போல் ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டார். இந்த கட்சியைக் காப்பாற்றுவார். இப்படிப்பட்ட ஒருவரைப் பார்த்து நேற்று "பதவி ஆசை இல்லை என்றால் ஏன் அரசியல் செய்ய வேண்டும்" எனக் கேட்கிறார்கள்.

பதவி தேவையில்லை
இந்த கட்சியைக் காக்க 50 ஆண்டுகள் அதிமுகவுடன் இணைந்து முழுக்க முழுக்க கட்சிக்காக பணியாற்றி உள்ளார். இதைத் தவிர அவருக்கு எந்த பதவியும் தேவையில்லை. இருவரும் ராஜினாமா செய்யட்டும். அப்போது கட்சியில் தொண்டர்களின் ஆதரவு யாருக்கு எனத் தெரிந்துவிடும். ஓபிஎஸ் கோரிக்கை நியாயமானது என்று தொண்டர்களும் தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் 10 ஆயிரம் தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் கோவையில் ஒரு பிரம்மாண்டமான செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படும்.

சசிகலா தினகரன்
பதவிக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து தொண்டர்களும் இன்றும் அமைதியாக மௌனம் காத்து வருகிறார்கள். கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் ஓபிஎஸால் மட்டுமே அது முடியும். இன்று இருக்கும் சூழ்நிலையில் சசிகலா, தினகரன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சொன்ன கருத்தை முழுமனதோடு ஏற்று இருக்கிறார்கள்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு, அவர் இருக்கும் போது இரு முறையும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒரு முறை என மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். ஓபிஎஸ் மீது தொண்டர்கள் அபரிவிதமான நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்த இயக்கத்தை நாலரை ஆண்டு காலமாக ஓபிஎஸ் காத்து வந்தார். ஆட்சியைத் தக்க வைக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி யார் என்று யாருக்கும் தெரிந்திருக்க முடியாது.

புரட்சி பயணம்
ஓ பி.எஸ்ஸை இழிவாகப் பேசுவதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். திருச்சியில் நான் செல்கின்ற இடமெல்லாம் கூட்டம் என எடப்பாடி சொல்கிறார். ஒவ்வொருவருக்கும் 1000 ரூபாய் பணம் கொடுத்து அழைத்து வருகிறார்கள். ஆனால் ஓ.பி.எஸ் எங்குச் சென்றாலும் தானாக வருகிற தொண்டர்கள் கூட்டம்! ஒட்டுமொத்த தொண்டர்கள் அவரை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள். விரைவில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாகப் புரட்சி பயணம் செல்லும் ஓபிஎஸ், தொண்டர்களை நேரில் சந்திக்க உள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications