எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. அடித்து சொன்ன திருமாவளவன்.. எதிர்க்கட்சிகள் ஷாக்
கோவை: மதுஒழிப்பு மாநாட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் ரீதியான லைம் லைட்டுக்கு வந்துள்ளது. திருமாவளவன் திமுகவுக்கு எதிராக திரும்புகிறார் என்று மற்ற அரசியல் கட்சிகள் கூறி வந்த நிலையில் திடீரென்று அவர் முதல்வரை சந்தித்தார். இதனால் திருமாவளவன் மீது அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்த நிலையில், தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சிய தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "துணை முதல்வரை தேர்ந்தெடுப்பது ஆளுங்கட்சி எடுக்கக் கூடிய முடிவு. யாரை துணை முதல்வர் ஆக்குவது, யாரை அதிகாரத்தில் அமர வைப்பது என்பது குறித்து ஆளுங்கட்சி முடிவு எடுக்கலாம். அது அவர்களின் உரிமை.

துணை முதல்வருக்கான தேவை என்பது அவர்களின் சுதந்திரம். இது அவர்கள் சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டிய விசயம். இதில் நாங்கள் கருத்து தெரிவிக்க என்ன இருக்கிறது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசித்து முடிவு எடுக்கட்டும். அறிவிப்பு வந்தவுடன் நாங்கள் கருத்து சொல்கிறோம். தேசிய கல்வி கொள்கை என்பது வேறு. தேசிய மது விலக்கு கொள்கை என்பது வேறு.
தேசிய கல்வி கொள்கையை பொறுத்தவரை, அதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு மாநிலங்களும் முரண்பட்டுள்ளன. எங்களைப் பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கையை அப்படியே ஏற்று நடைமுறைப்படுத்துவதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளது என்று நினைக்கிறோம். அதன் காரணமாகவே அதை எதிர்க்கிறோம். அதே நேரத்தில் தேசிய மதுவிலக்கு கொள்கை என்பது, தேசிய அளவில் நம் மனித குலத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாட்டில் பல மாநிலங்களில் அரசே மதுபான வியாபாரம் செய்வதால், நம் நாட்டுக்கு செல்ல வேண்டிய மனித வளம் வீணாகிறது. அதனால் அரசியலமைப்பு சட்டம் 47 படி தேசிய மதுவிலக்கு கொள்கை வரையறுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என நாங்கள் அழுத்தமாக வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை. அதேபோல தான், இந்தியா முழுவதும் மது கடைகளை மூடுவதற்கு மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்று சொல்கிறோம்.
இதை பாஜகவினர் எப்படி பார்த்தார்கள் என்று தெரியவில்லை. அரசியல் ரீதியாக அவர்கள் எதிர்பார்த்த ஏதோ ஒன்று நிறைவேறாத காரணத்தால் தமிழிசை உள்ளிட்டோர் விரக்தியில் பேசுகிறார்கள். நாங்கள் முதல்வரை சந்தித்தது குறித்தும் ஹெச். ராஜா நிறைய கேள்விகளை முன்வைத்துள்ளார். அவர் கேள்விக்கான பதில் மாநாட்டில் கிடைக்கும். எங்கள் மாநாடு நடக்கும்போது பொறுத்திருந்து பாருங்கள்.
முதல்வரை சந்திக்கும் முன்பு என்ன கோரிக்கை வைத்தோமோ அதே கோரிக்கையை தான் இப்போதும் முன்வைக்கிறோம். எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எங்களின் கோரிக்கையில் திமுக உடன்பட்ட காரணத்தாலே, அவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரி குறித்து அன்னபூர்ணா உரிமையாளர் பேசியது மிகவும் சரியானது. அதை நாங்கள் வரவேற்கிறோம். அவர் பேசியதுதான் சாமானிய மக்களின் கருத்தும். இவர்களின் அழைப்பில் அடிப்படையில்தான் தொழில்துறையினர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இவர்களே அழைத்து, இவர்களே அவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்." என்றார்.












Click it and Unblock the Notifications